காரை ஏற்றி கல்லூரி மாணவர் கொலை: கைதான மூன்று பேருக்கு 13-ம் தேதி வரை சிறை


காரை ஏற்றி கல்லூரி மாணவர் கொலை:  கைதான மூன்று பேருக்கு 13-ம் தேதி வரை சிறை
x

சென்னையில் காதல் தகராறில் நண்பருக்கு உதவிய கல்லூரி மாணவர் காரை ஏற்றி கொலை செய்யப்பட்டார்.

சென்னை


சென்னை அயனாவரம் முத்தம்மன் தெருவை சேர்ந்தவர் நிதின்சாய் (வயது 21). சென்னையில் உள்ள கலைக்கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு திருமங்கலத்தில் தனது நண்பர் மோகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.

பின்னர் அவர் தனது கல்லூரி நண்பர் அபிஷேக் என்பவருடன் ஸ்கூட்டரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். திருமங்கலம் பள்ளி சாலை அருகே வந்தபோது ஸ்கூட்டர் மீது அசுர வேகத்தில் வந்த சொகுசு கார் பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு நிதின்சாய் சம்பவ இடத்திலேயே பலியானார். அபிஷேக் படுகாயம் அடைந்தார்.

கார் மோதியதில் ஸ்கூட்டர் உருக்குலைந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்தனர். பலியான நிதின்சாய் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த அபிஷேக் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் இந்த விபத்து தொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய நிலையில், இது விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. நிதின்சாய் மற்றும் அபிஷேக்கின் நண்பர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவால் இந்த அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு திருமங்கலம் போக்குவரத்து போலீசாரிடம் இருந்து சட்டம்-ஒழுங்கு போலீசார் வசம் வந்தது. கொலை வழக்குப்பதிவு செய்து திருமங்கலம் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினார்கள். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் காரில் வந்தவர்கள், விபத்தில் நிதின்சாய் இறந்தது தெரியாமல் சிரித்தபடி எச்சரிக்கை விடுத்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் சொகுசு காரை ஓட்டி வந்து நிதின்சாய் மீது மோதி கொலை செய்தது கே.கே.நகர் பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகரின் பேரன் சந்துரு என்பது தெரிய வந்தது. இந்த நிலையில் கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என்று நிதின்சாயின் உறவினர்கள், நண்பர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று திருமங்கலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்து திருமங்கலம் உதவி கமிஷனர் பிரம்மானந்தன், இன்ஸ்பெக்டர் தீபக் ஆகியோர் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்தனர். அதன்படி பிரணவ் உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சந்துரு தலைமறைவானார். பின்னர் சந்துருவை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

நித்தின் மற்றும் அவரது நண்பர்கள் கல்லை எடுத்து எங்களை தாக்க முயன்றனர். கல்லால் தாக்க வந்ததால் அதிவேகமாக காரை எடுத்தபோது பைக் மீது மோதி விபத்துக்குள்ளானதாக சந்துரு போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து காரை ஏற்றி கல்லூரி மாணவர் நித்தின் சாய் கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்துரு உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

காரை ஒட்டிய இளைஞர் ஆரோன் திருமங்கலம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இளைஞர் கொலைக்கு பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் சொகுசு கார் வளசரவாக்கம் பகுதியில் சிக்கியது.

இந்நிலையில் கார் ஏற்றி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 பேரை ஆகஸ்ட் 13ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி கைது செய்யப்பட்ட சந்துரு, ஆரோன், யஷ்வந்த் ஆகிய 3 இளைஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டநிலையில், 14 நாட்களுக்கு சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

1 More update

Next Story