

சென்னை,
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
திருச்சியில் இருந்து சென்னைக்கு கல்லூரி புராஜக்ட் தொடர்பாக வந்திருந்த மாணவி காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அந்த மாணவி முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே அடித்தும், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை அனுப்பியும் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார் என்று அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுதியற்ற மாநிலமாக விடியா திராவிட மாடல் ஆட்சி மாற்றிவிட்டது என்பதை உணர்த்துகிறது.
கடந்த சில மாதங்களில் மட்டும் எத்தனை பாலியல் புகார்கள், எத்தனை குற்றங்கள்? முதல்- அமைச்சர் ஸ்டாலின் அவர்களே இன்னும் ஒருமாதம் தான் நம் ஆட்சி இருக்கப் போகிறது? சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தால் என்ன என்ற எண்ணம் வந்து விட்டதா உங்களுக்கு? உங்கள் இருண்ட ஆட்சியில் தினமும் அரங்கேறும் பாலியல் வக்கிரங்களும், அத்துமீறல்களையும் மக்கள் பார்த்துப் பார்த்து பொறுமையிழந்து விட்டார்கள். பெண்களைப் போற்றும் தமிழகத்தை இன்று பெண்களை போதையாக பார்க்கும் அளவிற்கு மாற்றி தமிழகம் என்றாலே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்னும் அளவிற்கு புனிதத்தைக் கெடுத்துவிட்டு எப்படி நிம்மதியாக உங்களால் உறங்க முடிகிறது?
உங்கள் பெண் அமைச்சர்கள் என்ன கும்பகர்ணன் உறக்கத்தில் இருக்கிறார்களா? விடியா திமுக மகளிரணி நிர்வாகிகளுக்கு உங்களுக்கு புகழ் துதி பாடவும், ஆரத்தி எடுக்கவுமே நேரம் சரியாக உள்ளது அப்புறம் எப்படி மற்ற பெண்களுக்கு நேரும் கொடுமையை பற்றி பேசப் போகிறார்கள். இனியும் இதுபோல் சம்பவங்கள் தொடர்ந்தால் தன்னிச்சையான போராட்டங்கள் எழுவது உறுதி.. திமுக அரசு இந்தத் தேர்தலோடு வீழ்வதும் உறுதி.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.