தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவினை ஆராய ஆணையம் அமைப்பு

தொழிற்கல்வி படிப்புகளில் மாணவர் சேர்க்கை அளவை ஆராய்வதற்கு ஆணையம் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவினை ஆராய ஆணையம் அமைப்பு
Published on

சென்னை,

தொழிற்கல்வி படிப்புகளில் கடந்த 2020-21 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இதற்கான காரணங்கள் குறித்து ஆராய்ந்து பரிந்துரை செய்ய, ஓய்வுபெற்ற டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது;-

2020-2021 ஆம் கல்வியாண்டில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதேபோன்று, பொறியியல் / வேளாண்மை / கால்நடை / மீன்வளம்/ சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளில் கடந்த ஆண்டுகளின் மாணவர் சேர்க்கை விவரங்களின்படி, அரசுக் கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னிலை வகிக்கும் சுயநிதிக்கல்லூரிகளில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர் என்றும் இந்நிலை மாற்றப்பட வேண்டுமென்று பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.

இக்கோரிக்கைகளைத் தீர ஆராய்ந்தும், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சமூகப் பொருளாதார நிலைகள் குறித்தும், அதனால் அவர்கள் சந்திக்கக்கூடிய இடர்பாடுகள் ஏதுமிருப்பின், அவற்றைக் கண்டறியவும், கடந்த ஆண்டுகளில் அம்மாணவர்களின் சேர்க்கை பல்வேறு தொழிற்கல்வி நிறுவனங்களில் எவ்வாறு உள்ளது என ஆய்வு செய்தும், மேலே கூறிய அக்காரணிகளால், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சேர்க்கை தொழிற்கல்விகளான பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற படிப்புகளில் குறைந்த அளவில் உள்ள நிலையே இருப்பின், இந்த நிலையை சரிசெய்திட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்ய, ஓய்வு பெற்ற டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி த. முருகேசன் அவர்கள் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்து, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15-6-2021) உத்தரவிட்டுள்ளார். இந்த ஆணையம், அறிக்கையினை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அளிக்கும்

இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com