

சென்னை,
பயிற்சி மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பு மாணவர்களின் பயிற்சி கால உதவி ஊதியத்தை உயர்த்திட வேண்டும்- என்று தமிழ்நாடு அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள். இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி கால உதவி ஊதியத்தை தமிழ்நாடு அரசு உயர்த்திட வேண்டும். பல்வேறு மாநிலங்களை ஒப்பிடும் பொழுது தமிழ்நாட்டில் தான் இவர்களுக்கான பயிற்சிக்கால உதவி ஊதியம் குறைவாக உள்ளது.
2021 ஆம் ஆண்டிற்கு பிறகு பயிற்சிக்கால உதவி ஊதியம் உயர்த்தப்படவில்லை. தற்பொழுது பயிற்சி மருத்துவர்களுக்கு ரூ 27,319 வழங்கப்படுகிறது. இவ்வூதியம் மேற்கு வங்கத்தில் ரூ 44,000, ஒடிசாவில் ரூ 40,000, அசாமில் ரூ 36,000 ஆக உள்ளது. முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு ரூ 52,451 முதல் ரூ 56,275 வரை வழங்கப்படுகிறது. இதுவே மராட்டிய மாநிலத்தில் ரூ 93,559 முதல் ரூ 95,257 வரை வழங்கப்படுகிறது.
உயர் சிறப்பு மருத்துவ படிப்பிற்கு ரூ 54,636 முதல் ரூ 60,101 வரை வழங்கப்படுகிறது. இதுவே மராட்டிய மாநிலத்தில் ரூபாய் 85,000 முதல் ரூபாய் 99,000 வரை வழங்கப்படுகிறது.
பல்வேறு மாநிலங்களில் தமிழ்நாட்டைவிட அதிகமாக பயிற்சிகால உதவி ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே, இன்றைய பணவீக்கம், விலைவாசி உயர்வு, போக்குவரத்து கட்டண உயர்வு, விடுதி மற்றும் உணவுக் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு, இவர்களுக்கான பயிற்சிக்கால உதவி ஊதியத்தை உடனடியாக தமிழ்நாடு அரசு உயர்த்தி வழங்கிட வேண்டும்.
பல்வேறு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில், பயிற்சி மருத்துவர்களுக்கும், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும், உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களுக்கும் தொடர்ச்சியாக 36 மணி நேரம் வரை வேலை வழங்கப்படுகிறது. அவர்களின் பயிற்சிக்கு தொடர்பில்லாத வேலைகளும், மருத்துவக் காப்பீட்டு வேலைகளும் வழங்கப்படுகின்றன. இது அப்பட்டமான உழைப்பு சுரண்டலாகும்.
இத்தகைய உழைப்பு சுரண்டலை எதிர்த்து, 8 மணி நேரம் மட்டுமே வேலை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வழக்கை தொடர்ந்தது. இவ்வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் 8.00 மணி நேரத்திற்கு மேல் தொடர்ச்சியாக வேலை வழங்கக்கூடாது என தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆனாலும் அத்தீர்ப்பை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தவில்லை.
இதன் காரணமாக பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மற்றும் உயர்சிறப்பு மருத்துவ மாணவர்கள் கடுமையான மன மற்றும் உடல் உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். பலர் படிப்பை விட்டு விலகிவிடுகிறார்கள். ஒரு சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். எனவே, இத்தகைய அவல நிலையை போக்கிட, எட்டு மணி நேரம் மட்டுமே தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதியிடன் தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.