மாம்பழ விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை

மாம்பழ விவசாயிகளுக்கு கட்டுபடியாகக்கூடிய கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

உலகிலுள்ள அனைத்துத் தொழில்களை மேற்கொள்வோருக்கும் உணவை அளித்து உலத்தாருக்கு அச்சாணி போன்று விளங்குபவர்கள் விவசாயிகள் என்ற நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது அரசின் தலையாய கடமைகளில் ஒன்றாகும். இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த விவசாயிகளை விரக்தியின் விளிம்பிற்கு அழைத்துச் சென்றிருக்கிறது தி.மு.க. அரசு.

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் மாம்பழ விளைச்சல் அதிகரித்துள்ளதன் காரணமாக, கடந்த ஆண்டு நூறு ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மாம்பழம் தற்போது 40 ரூபாய்க்கு கூட விற்பனை செய்ய இயலாத நிலை உள்ளதாகவும், இதனால் பெரிய அளவில் இழப்பினை மாம்பழ விவசாயிகள் சந்தித்து வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் உள்ள மாம்பழக் கூழ் தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளிடமிருந்து மாம்பழங்களை கொள்முதல் செய்த நிலையில், தற்போது ஆந்திரப் பிரதேசத்திலும் மாம்பழ விளைச்சல் அதிகமாக இருப்பதன் காரணமாக தமிழக விவசாயிகளின் மாம்பழங்கள் அங்கு கொள்முதல் செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்படுகின்றன என்றும், ஆந்திரப் பிரதேச அரசு அங்குள்ள ஒவ்வொரு ஆலைகளிலும் அதிகாரிகளை நியமித்து, ஆதார் எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் ஆந்திரப் பிரதேச விவசாயிகளின் மாம்பழங்களை மட்டும் கொள்முதல் செய்வதாகவும், ஆந்திரப் பிரதேசத்தில் விளையும் மாம்பழங்களுக்கான கொள்முதல் விலை ஒரு கிலோ பன்னிரெண்டு ரூபாய் என ஆந்திரப் பிரதேச அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக மாம்பழ விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில், தமிழகத்திலுள்ள மாம்பழ விவசாயிகளுக்கு எந்தவித உதவியையும் தி.மு.க. அரசு செய்யவில்லை என்றும், தமிழகத்தில் உள்ள மாம்பழக் கூழ் தயாரிப்பு ஆலைகள் கொள்முதல் செய்வதை நிறுத்தியுள்ளன என்றும், கொள்முதல் செய்யும் ஆலைகள் ஒரு கிலோவிற்கு நான்கு ரூபாய் மட்டுமே வழங்குகின்றன என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25,000 ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டுமென்றும் மாம்பழ விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மாம்பழ விவசாயிகளின் கோரிக்கைக்கு தீர்வு கண்டுவிட்டதாக அமைச்சர்கள் தெரிவித்தாலும், கள யதார்த்தம் என்பது வேறு மாதிரியாக இருப்பதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள மாம்பழ விவசாயிகளின் கோரிக்கையினை உடனடியாக ஆராய்ந்து, அவர்களுடைய மாம்பழங்களை தமிழகத்தில் உள்ள மாம்பழக்கூழ் தயாரிப்பு நிறுவனங்கள் கொள்முதல் செய்யவும், விவசாயிகளுக்கு கட்டுபடியாகக்கூடிய கொள்முதல் விலையை நிர்ணயம் செய்யவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25,000 ரூபாய் இழப்பீடு வழங்கவும் முதல்-அமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com