அமைச்சர்களின் முரண்பட்ட தகவல்: பெங்களூருவில் ஆகஸ்டு 3-ந்தேதி விஜய் - டி.கே.சிவக்குமார் சந்திப்பு நடக்குமா?

எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோ முதல்-அமைச்சர் விஜய்யின் பெங்களூரு பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அமைச்சர்களின் முரண்பட்ட தகவல்: பெங்களூருவில் ஆகஸ்டு 3-ந்தேதி விஜய் - டி.கே.சிவக்குமார் சந்திப்பு நடக்குமா?
Published on

சென்னை,

அமைச்சர்களின் முரண்பட்ட தகவலால், பெங்களூருவில் ஆகஸ்டு 3-ந் தேதி விஜய் - டி.கே.சிவக்குமார் சந்திப்பு நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேகதாது அணை பிரச்சினை

கர்நாடகாவில் இருந்து காவிரி வழியாக இந்த ஆண்டு தமிழகத்திற்கு முறையாக தண்ணீர் திறக்கப்படவில்லை. தென்மேற்கு பருவமழை போதுமான அளவு பெய்யாத காரணத்தால், எங்களுக்கே விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை என்று கர்நாடக அரசு மறுத்துவிட்டது.

இதுவொரு பிரச்சினை என்றால், மேகதாது எனும் இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருவது மற்றொரு பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஏற்கனவே, கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே 4 இடங்களில் அணை கட்டப்பட்டுள்ளது. மேகதாதுவிலும் அணை கட்டினால், தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீர் மேலும் குறையும்.

எம்.ஜி.ஆர். பாணியில் விஜய்

இதனால், மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில், மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பாணியில், கர்நாடக முதல்-மந்திரியை சென்று சந்திக்க, தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் நடவடிக்கை மேற்கொண்டார்.

அதன்படி, ஆகஸ்டு 3-ந் தேதி பெங்களூருவில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று தகவல்கள் வெளியானது. இதை தமிழக வேளாண் துறை அமைச்சர் வினோத் உறுதிப்படுத்தினார். ஆனால், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மறுத்தார்.

இது தொடர்பாக, கருத்து தெரிவித்த மின்துறை அமைச்சர் நிர்மல்குமார், "முதல்-அமைச்சர் விஜய் கர்நாடகா செல்லும் முடிவை அவருடைய அலுவலகமே அறிவிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களின் முரண்பட்ட தகவல்

இப்படி, அமைச்சர்களின் முரண்பட்ட தகவலால், திட்டமிட்டபடி ஆகஸ்டு 3-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பெங்களூரு சென்று கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை சந்திப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே, மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் தமிழக எல்லையில் போராட்டம் நடத்தியுள்ளனர். தமிழக எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் விஜய்யின் பெங்களூரு பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை

எனவே, பெங்களூரு சென்று கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை சந்திக்கலாமா? அல்லது ரத்து செய்யலாமா? என்று முதல்-அமைச்சர் விஜய் யோசித்து வருகிறார். காவிரி, மேகதாது பிரச்சினையை சட்ட ரீதியாக சந்திக்கலாமா? என்று சட்ட வல்லுநர்களுடன் அவர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com