காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமரை தாக்க திட்டம்; உண்மைக்கு புறம்பாக சபாநாயகர் குற்றச்சாட்டு: செல்வப்பெருந்தகை கண்டனம்

காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமரை தாக்க திட்டம் என சபாநாயகர் ஓம்பிர்லா கூறிய அபாண்டமான குற்றச்சாட்டை திரும்ப பெற வேண்டுமென்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமரை தாக்க திட்டம்; உண்மைக்கு புறம்பாக சபாநாயகர் குற்றச்சாட்டு: செல்வப்பெருந்தகை கண்டனம்
Published on

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிமணி, சுதா மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதமர் மோடியை தாக்க திட்டமிட்டிருந்தார்கள் என்று உண்மைக்கு புறம்பாக சபாநாயகர் ஓம்பிர்லா குற்றம் சாட்டியிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன். அவருக்கு எனது கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் அவைக்கு வந்து சீனா ஊடுருவல் மற்றும் அமெரிக்காவின் நிபந்தனைக்கு பணிந்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென்று எதிர்கட்சிகள் கூறிய நிலையில், இன்று அவர் அவைக்கு வரவில்லை. அதற்கு சபாநாயகர் மேற்கண்டவாறு விளக்கமளித்திருக்கார்.

நடுநிலையுடன் செயல்பட வேண்டிய சபாநாயகர் அவதூறாக பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல. அகிம்சையே காங்கிரஸ் பேரியக்கத்தின் கொள்கை. எனவே அவர் கூறிய அபாண்டமான குற்றச்சாட்டை திரும்ப பெற வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com