தொகுதி மறுசீரமைப்பு மசோதா: கூட்டாட்சி தத்துவத்திற்கு விடப்பட்ட சவால்: எஸ்டிபிஐ எச்சரிக்கை

முன்மொழியப்பட்டுள்ள மகளிர் இடஒதுக்கீட்டையும் தன்னிச்சையான முறையில் செயல்படுத்த கூடாது என்று எஸ்டிபிஐ தெரிவித்துள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு மசோதா: கூட்டாட்சி தத்துவத்திற்கு விடப்பட்ட சவால்: எஸ்டிபிஐ எச்சரிக்கை
எஸ்டிபிஐ
Published on: 

சென்னை,

தொகுதி மறுசீரமைப்பு மசோதா ஜனநாயகத்தைக் கைப்பற்றி, நாட்டின் கூட்டாட்சி அமைப்பைச் சீர்குலைக்கும் அப்பட்டமான சதியாகும்!" என்று எஸ்டிபிஐ தேசிய தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே.பைஸி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:-

தொகுதி மறுசீரமைப்பு மசோதா

மத்திய பாஜக அரசால் முன்மொழியப்பட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI) வன்மையாக எதிர்க்கிறது. இந்த மசோதா ஜனநாயகத்தை சீர்குலைக்கவும், பாஜக பல தசாப்தங்களாக அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கவும், "ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டத்திற்கான ஒரு முன்னோட்டமாக அமையவும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சதியேயன்றி வேறொன்றுமில்லை.

கூட்டாட்சி தத்துவம்

தொகுதி மறுசீரமைப்பு என்பது மிக முக்கியமானதொரு விவகாரமாகும். இதனை வெறும் மக்கள்தொகை அடிப்படையிலான கணக்கீடாக மட்டும் அணுகாமல், கூட்டாட்சி தத்துவம், மாநிலங்களின் உரிமைகள் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவினரின் சமமான ஜனநாயக பங்கேற்பு ஆகியவற்றிற்கு உரிய மதிப்பளித்து அணுக வேண்டும்.

கூட்டாட்சி அமைப்பு

ஆனால், தற்போது முன்மொழியப்பட்டுள்ள 50 சதவீதம் இடங்கள் அதிகரிப்பு என்பது சமத்துவத்தை உறுதி செய்யும் தீர்வாக அமையாது. அனைத்து மாநிலங்களின் இடங்களையும் ஒரே சீராக 50 சதவீதம் உயர்த்தினால்கூட, அது வட மற்றும் தென் மாநிலங்களுக்கு இடையிலான பிரதிநிதித்துவ இடைவெளியை மேலும் அதிகரித்து, தென் மாநிலங்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகவே முடியும். நாடாளுமன்றத்தில் சட்டங்களை இயற்றுவதற்கும் திருத்துவதற்கும் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையே முக்கியம் என்பதால், மத்திய அரசு இனி தென் மாநிலங்களின் ஆதரவை நாட வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடும். இது இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பின் அடித்தளத்தையே தகர்ப்பதோடு, மாநிலங்களுக்கு இடையிலான சமமான அரசியல் பிரதிநிதித்துவ கொள்கையையும் சிதைத்துவிடும்.

பிரதிநிதித்துவ ஒழிப்பு

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 800-க்கும் மேல் உயர்த்தி, அதன் பின்னர் தொகுதி எல்லைகளை மாற்றியமைப்பதன் மூலம், பாஜக-விற்கு சாதகமான தொகுதிகளின் எண்ணிக்கையை 10 சதவீதம் வரை அதிகரிப்பதே மோடி அரசின் அரசியல் நோக்கமாக தெரிகிறது. அசாம் மற்றும் காஷ்மீரில் சிறுபான்மையினரின் வாக்கு பலத்தை குறைக்கும் வகையில் தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டதை போலவே, நாடு முழுவதும் சிறுபான்மையினர் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாக உள்ள தொகுதிகளை துண்டாட 'ஜெர்ரிமாண்டரிங்' (Gerrymandering - தங்களுக்கு சாதகமாக தொகுதி எல்லைகளை மாற்றியமைத்தல்) எனும் தந்திரத்தை பயன்படுத்தி, நாடாளுமன்றத்தில் மத சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை முற்றிலுமாக ஒழிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

விவாத முடக்கம்

அதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை சுமார் 850 ஆக அதிகரிப்பது, அவையில் விவாதங்களுக்கான நேரத்தை குறைத்துவிடும். இதனால் நாடாளுமன்றம் என்பது ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கான மன்றமாக இல்லாமல், உறுப்பினர்கள் கூடும் வெறும் சபையாக மட்டுமே மாறிவிடும்.

வலியுறுத்தல்

இத்தகைய சூழ்நிலையில், 2025-ம் ஆண்டு தமிழ்நாடு அரசால் முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப, மக்கள்தொகை வளர்ச்சியை நிலைப்படுத்தும் நோக்கில் 2126-ம் ஆண்டு வரை தொகுதி மறுசீரமைப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 550 ஆக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் எஸ்டிபிஐ வலியுறுத்துகிறது. நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் நியாயமான தீர்வை எட்டுவதற்கு இதுவே சரியான வழியாகும்.

மகளிர் இடஒதுக்கீடு

அதேபோன்று, முன்மொழியப்பட்டுள்ள மகளிர் இடஒதுக்கீட்டையும் தன்னிச்சையான முறையில் செயல்படுத்த கூடாது. சமூகத்தின் அனைத்து பிரிவுகள், அனைத்து சாதிகள் மற்றும் விளிம்புநிலை சமூகங்களை சேர்ந்த பெண்களுக்கும் சமமான மற்றும் போதுமான பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் உரிய உள்-ஒதுக்கீடுகள் சேர்க்கப்பட வேண்டும்.

அறைகூவல்

நாட்டின் ஜனநாயக கட்டமைப்பிற்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் அச்சுறுத்தலாக உள்ள இந்த ஆபத்தான நடவடிக்கையிலிருந்து மத்திய அரசு உடனடியாக பின்வாங்க வேண்டும். இந்த இக்கட்டான தருணத்தில், திமுக மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட அனைத்து மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். நமது ஒற்றுமையில் ஏற்படும் எந்தவொரு பிளவும் பாஜக-வின் திட்டங்களுக்கு எளிதில் வழிவகுத்துவிடும் என்பதால், நாட்டின் ஜனநாயகத்தையும் கூட்டாட்சித் தத்துவத்தையும் பாதுகாக்க அனைவரும் முழு உறுதியுடனும் துணிச்சலுடனும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி அறைகூவல் விடுக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

X