

திண்டுக்கல்,
தொகுதி மறுவரையறை தீர்மானம் தோல்வி தொடர்பாக திண்டுக்கல் பரப்புரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;
இன்னும் 100 ஆண்டுகள் கழித்தும் வரலாற்றுல நின்னு பேசக்கூடிய வெற்றி. தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! எனச் சொன்னேன். இன்று தமிழ்நாடு வென்றுள்ளது. கறுப்புக் கொடி ஏற்றினால் போதுமா என்றெல்லாம் சொன்னார்கள்.. இப்போ ஒரே போடா போட்டுட்டோம்ல..
தொகுதி மறு வரையறையால் தமிழ்நாட்டு தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். இந்த மசோதாவை நிறைவேற்றுவது என்பது வெற்றி பேப்பரில் கையொப்பமிடுவது போன்றது. தமிழகத்தை மிரட்டி பார்ப்பவர்களுக்கு தக்க பதிலடி நாடாளுமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஏன் அவசரம்.. பொறுமையுடன் பேசுவோம் என கூறினோம். எதிர்க்கட்சிகளும் இதைத்தான் கூறினார்கள். 40 பேர் டெல்லி போய் என்ன செய்தார் என எடப்பாடி பழனிசாமி கேட்டார். இப்போது 40 பேர் பாஜகவை பந்தாடி வந்துள்ளனர். பிரதமர் மோடி தன்னுடைய 12 ஆண்டு கால ஆட்சியில் சந்தித்து இருக்கக்கூடிய முதல் தோல்வி, மாபெரும் தோல்வி இது.
பாஜக நினைத்தால் 2024ல் மகளிர் இட ஒதுக்கீடு கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் கொண்டுவரவில்லை. தேர்தல் நேரத்தில் இதுபோன்று கொண்டு வந்தால் அசால்ட்டாக இல்லை. அலர்ட்டாக இருப்போம். மசோதாவுக்கு எதிராக வாக்களித்த அனைத்து எம்பிக்களுக்கும் நன்றிகள்.
பழனிசாமிக்கு நான் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.
தேசிய கல்வி கொள்கையில் உங்கள் நிலைப்பாடு என்ன?
நீட்டை ரத்து செய்தால் கூட்டணி என ஏன் பாஜகவுக்கு நிபந்தனை விதிக்கவில்லை?
கற்பனைக்காக.. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றால் தமிழகத்தில் அதிமுக ஆட்சி என பாஜக உறுதி கொடுப்பார்களா?
வக்பு சட்டத்தை கைவிடக்கோரி பாஜகவிடம் கேட்டீர்களா?
இந்தி திணிப்பை எதிர்க்க மறுக்கும் நீங்கள் தமிழரா?
திராவிடம் என்பது போலி கொள்கை என பாஜக கூறுகிறது. உங்கள் கட்சியின் அடிப்படையை மறுக்கும் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்?
நீங்கள் இதற்கு பதிலளிக்கவிட்டால் மக்களே உங்களை விட மாட்டார்கள்.”
இவ்வாறு அவர் கூறினார்.