தொகுதி மறுவரையறை மசோதா கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது! - எஸ்டிபிஐ கட்சி விமர்சனம்

தற்போதைய 543 இடங்களையே அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொடர வேண்டும்.
தொகுதி மறுவரையறை மசோதா கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது! - எஸ்டிபிஐ கட்சி விமர்சனம்
Published on: 

சென்னை,

தொகுதி மறுவரையறை மசோதா கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என எஸ்டிபிஐ கட்சி விமர்சனம்

செய்துள்ளது.

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலப் பொறுப்புத் தலைவர் அச. உமர் பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தென் மாநிலங்கள் உள்பட அனைத்து மாநிலங்களின் மக்களவைப் பிரதிநிதித்துவ விகிதம் குறையாமல் பாதுகாக்கப்படும் என்ற மத்திய பாஜக அரசின் உத்தரவாதத்தை நம்பி, புதிய தொகுதி மறுவரையறை மசோதாவை ஒருபோதும் ஆதரிக்கக் கூடாது. நாடாளுமன்ற ஜனநாயகத்தையும், அரசியலமைப்பு வழங்கிய உரிமைகளையும் சிதைத்து வரும் மத்திய பாஜக அரசின் வாக்குறுதிகளை நம்பி, இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த எதிர்ப்பில் விரிசல் ஏற்படுவது கவலையளிக்கிறது.

மாநிலங்களுடன் விரிவான ஆலோசனை நடத்தாமலும், மாநிலச் சட்டமன்றங்களின் கருத்துகளைக் கேட்காமலும், அவசரச் சிறப்புக் கூட்டத்தொடர் மூலம் இத்தகைய முக்கிய அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வருவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு முற்றிலும் எதிரானது.

ஒரே நாடு, ஒரே தேர்தல்

பாஜகவின் ஒவ்வொரு நகர்வும் அவர்களின் குறுகிய அரசியல் நலன் சார்ந்தே இருக்கும் நிலையில், இந்த மசோதா ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ எனும் அவர்களின் நீண்டகாலச் செயல்திட்டத்திற்கான முதல் படியாகும். இதில் மாநிலங்களுக்குக் கிடைக்கும் கூடுதல் தொகுதிகளின் பங்கு குறித்த விவாதத்தை மட்டுமே முன்னிறுத்தி, பாஜகவின் திட்டத்தை வரவேற்பது பேராபத்தானது. உண்மையில், தொகுதி மறுவரையறை ஆணையம் தேர்தல் தொகுதிகளின் எல்லைகளை எவ்வாறு மாற்றியமைக்கப் போகிறது என்பதில்தான் நாட்டின் அரசியல் சமன்பாட்டை மாற்றும் சூட்சுமம் அடங்கியுள்ளது.

மத்திய பாஜக அரசு தற்போது மேற்கொள்ளவுள்ள தொகுதி மறுவரையறை என்பது இந்திய நாடாளுமன்றத்தில் மொழி, இன, மதச் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தின் மீது நிகழ்த்தப்போகும் பெரும் தாக்குதல் முயற்சியாகும். இதற்கு ஒருபோதும் இடமளித்துவிடக் கூடாது. தொகுதிகளின் எல்லைகளை மாற்றியமைப்பதன் மூலம் ஆளும் பாஜக தனக்குச் சாதகமான வாக்கு வங்கிகளை ஒருங்கிணைக்கும் அதேநேரத்தில், எதிர்க்கட்சிகள், சிறுபான்மைச் சமூகங்கள் மற்றும் பட்டியலினச் சமூகங்களின் அரசியல் செல்வாக்கைத் திட்டமிட்டுக் குறைக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதற்கு அஸ்ஸாம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத் தொகுதி மறுவரையறையே கண்கூடான சான்றாகும்.

முதன்மையான கவலை

அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாச்சார அளவு மாறாமல் 50 சதவீதம் இடங்கள் உயர்த்தப்பட்டாலும்கூட, தென் மாநிலங்களுக்கும் இதர மாநிலங்களுக்கும் இடையிலான மொத்த இடங்களின் வித்தியாசம் 413-லிருந்து 620-ஆக அதிகரிக்கும் என்பது எஸ்டிபிஐ கட்சியின் முதன்மையான கவலையாகும். இந்த மிகப்பெரிய எண்ணிக்கை வித்தியாசம் நாடாளுமன்றத்தில் தென் மாநில எம்.பி.க்களின் குரலை முற்றிலுமாக வலுவிழக்கச் செய்வதோடு, மத்திய அரசின் பெரும்பான்மைவாத அணுகுமுறைக்கே வலுசேர்க்கும்.

அதுமட்டுமின்றி, மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543-லிருந்து 815-ஆக உயரும்போது, மாநிலங்களவையின் உச்சவரம்பு 250-ஆகவே நீடிப்பதால் இரு அவைகளுக்கு இடையிலான உறுப்பினர் விகிதம் 2.2:1 என்பதிலிருந்து 3.3:1-ஆக மாறும். இது இரு அவைகளின் கூட்டுக் கூட்டங்களில் மக்களவையின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி, மாநிலங்களின் உரிமைகளைப் பிரதிபலிக்கும் மாநிலங்களவையின் அதிகாரத்தைப் பலவீனப்படுத்திவிடும்.

எதிர்க்கட்சிகளின் ஒற்றைக் கோரிக்கை

எனவே, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதைக் கைவிட்டு, தற்போதைய 543 இடங்களையே அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொடர வேண்டும்; இந்த எண்ணிக்கையிலேயே பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டையும் செயல்படுத்த வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் ஒற்றைக் கோரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆகவே, மாநில உரிமைகளையும், மக்களின் அடிப்படை உரிமைகளையும் பறிக்கும் இத்தகைய செயல்பாடுகளுக்கு எதிராக அனைவரும் விழிப்புடன் இருந்து, ஜனநாயகத்தைக் காக்க ஒன்றிணைய வேண்டும். மக்களாட்சித் தத்துவத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்க வேண்டிய தலையாய கடமை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது என்பதால், இவ்விவகாரத்தில் திமுக தன் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மத்திய பாஜக அரசின் இந்த ஜனநாயக விரோதத் திட்டத்தை முறியடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் ஒருங்கிணைய வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

X