குவாரிகள் மூடப்படுவதால் கட்டுமான செலவு சதுரடிக்கு ரூ.100 அதிகரிக்கும் அபாயம்

குவாரிகள் தற்காலிகமாக மூடப்படுவதால் ஜல்லி, எம்-சாண்ட் போன்ற அடிப்படை கட்டுமானப் பொருட்களின் விலை உயர வாய்ப்பு அதிகமாக உள்ளது.
குவாரிகள்
Published on

சென்னை,

சென்னை கட்டுமான பொறியாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் பல குவாரிகள் தற்காலிகமாக மூடப்படுவதால் கட்டுமானத் துறையில் பெரிய தாக்கம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக ஜல்லி, எம்-சாண்ட் போன்ற அடிப்படை கட்டுமானப் பொருட்களின் விலை உயர வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக கட்டிடம் கட்டும் செலவு சதுர அடிக்கு ரூ.100 வரை கூடும் அபாயம் இருப்பதாக கட்டுமானத் துறையினர் கவலை தெரிவிக்கின்றனர்.

கட்டுமானப் பணிகள்

அரசாங்கம் சட்டவிரோத கல் எடுப்பை கட்டுப்படுத்துவது வரவேற்கத்தக்க நடவடிக்கை. ஆனால் அதே நேரத்தில் பொதுமக்கள் மற்றும் கட்டுமானத் துறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு, ஜல்லி தேவை - 50,000 முதல் 60,000 லோடுகள், எம்-சாண்ட் தேவை - 60,000 முதல் 70,000 லோடுகள் இந்த அளவிலான தேவைக்கு போதுமான உற்பத்தி இல்லாத நிலை ஏற்பட்டால், மிகப்பெரிய தட்டுப்பாடு உருவாகும் அபாயம் உள்ளது.

இதனால் கட்டுமானப் பணிகள் தாமதம், பொருட்களின் விலை உயர்வு, வீடு கட்டும் பொதுமக்களுக்கு கூடுதல் சுமை, தொழிலாளர்கள் வேலை இழப்பு போன்ற பிரச்சினைகள் உருவாகலாம். எனவே அரசு உடனடி மாற்று ஏற்பாடுகள், புதிய அனுமதிகள், கண்காணிப்பு முறைகள் மற்றும் கட்டுமானத் துறையினருடன் கலந்தாலோசித்து தீர்வு காண வேண்டியது அவசியமாகியுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com