

சென்னை,
சட்டமன்ற தேர்தலில் ஆளும்கட்சியான தி.மு.க. 26 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளது. இதில் காங்கிரஸ் -28, தே.மு.தி.க.-10. விடுதலை சிறுத்தைகள்-8, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-5, இந்திய கம்யூனிஸ்டு-5. ம.தி.மு.க.-4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்- 2, மனிதநேய மக்கள் கட்சி-2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி-2 மற்றும் சில கூட்டணிகட்சிகள் என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி கூட்டணி கட்சிகளுக்கு 70 இடங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தி.மு.க. 164 இடங்களில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
தொடர்ந்து கூட்டணி கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அந்த வகையில் ம.தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்திருந்தது. தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர், சீர்காழி (தனி) ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க. சார்பில் மொடக்குறிச்சி தொகுதியில் செந்தில்நாதன், மதுரை தெற்கு தொகுதியில் பூமிநாதன், கடையநல்லூர் தொகுதியில் ராஜேந்திரன், சீர்காழி (தனி) தொகுதியில் செந்தில் செல்வன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் சீர்காழி தொகுதியில் தனிச்சின்னத்திலும் மற்ற 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும் ம.தி.மு.க. வேட்பாளர்கள் களம் காண உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
2026, ஏப்ரல் திங்களில் நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மறுமலர்ச்சி தி.மு.கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றான சீர்காழி (தனி) தொகுதியிலும் கழக வேட்பாளர் வழக்கறிஞர் இரா.செந்தில்செல்வன் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பதை தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனி சின்னத்தை கேட்டு பெறுவதில் தாமதம் நிலவுவதால், தேர்தல் நெருங்கும் சூழலில் சின்னத்தை அறிமுகம் செய்து பிரசாரம் செய்வது கடினமாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி 176 தொகுதிகளில் 'உதயசூரியன்' சின்னம் களம் காண உள்ளது குறிப்பிடத்தக்கது.