தொடரும் மரணங்கள்: அரசு மதுக்கடைகளில் விற்கப்படுவது மதுவா? நஞ்சா? அன்புமணி ராமதாஸ் கேள்வி

தொடரும் மரணங்கள்: அரசு மதுக்கடைகளில் விற்கப்படுவது மதுவா? நஞ்சா? டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி.
தொடரும் மரணங்கள்: அரசு மதுக்கடைகளில் விற்கப்படுவது மதுவா? நஞ்சா? அன்புமணி ராமதாஸ் கேள்வி
Published on

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கள்ளுக்கடை என்ற இடத்தில், அரசு மதுக்கடையில் மது வாங்கி அருந்திய கல்லாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் (வயது 35) மதுக்கடை வாசலிலேயே மயங்கி விழுந்து இறந்திருக்கிறார். தமிழ்நாட்டில் மது குடித்த சில மணி நேரங்களிலேயே மக்கள் உயிரிழப்பது தொடர்ந்து நடப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

சேகருக்கு தொடர்ந்து மது அருந்தும் வழக்கம் இருந்ததாகவும், அதனால் தான் அவர் உடல்நலம் பாதித்து மது குடித்தவுடன் இறந்து விட்டதாகவும் கூறி இந்த உயிரிழப்பை நியாயப்படுத்த காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் முயல்வது கண்டிக்கத்தக்கது. குடிப்பழக்கத்தால் 35 வயதிலேயே ஓர் இளைஞர் உயிரிழக்கிறார் என்றால் தமிழ்நாட்டு அரசு மதுக்கடைகளில் விற்கப்படுவது மதுவா, நஞ்சா, அமிலமா? என்ற வினாவிற்கு தமிழக அரசு தான் விடையளிக்க வேண்டும். மதுக்கடைகளில் விற்கப்படும் மது வகைகளின் தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும்.

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த தச்சன்குறிச்சியில் அரசு மதுக்கடையில் கடந்த 17-ம் நாள் மது குடித்த முனியாண்டி, சிவக்குமார் ஆகியோர் திடீர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அதற்கு முன் தஞ்சாவூர், மயிலாடுதுறை, மதுரை, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு மதுக்கடைகள் மற்றும் குடிப்பகங்களில் மது வாங்கி குடித்தவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மதுக்கடை மரணங்கள் அனைத்துக்கும் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com