

சென்னை,
சொத்து விற்பனை பத்திரங்கள் பதிவை எளிமைப்படுத்த கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி ஸ்டார் 3.0 என்ற புதிய மென்பொருள் பதிவுத் துறையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் முதற்கட்டமாக 18 புதிய வசதிகளை பெற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதாவது, சொத்து விற்பனை பத்திரங்களை, சார்-பதிவாளர் அலுவலகம் செல்லாமல் பதிவு செய்யவும் இதில் வசதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், ஸ்டார் 3.0 அறிமுகமாகி 2 மாத காலம் ஆகியும் 18 புதிய வசதிகளையும் பொதுமக்களால் முழுமையாக பெற முடியவில்லை.
பதிவுத்துறை இணையதளத்தில் வில்லங்க விபரங்களை பார்க்க சென்றால்கூட, முதல் படிநிலையில் விபரங்களை உள்ளீடு செய்தாலும், அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியவில்லை. எதற்கெடுத்தாலும், 'மன்னிக்கவும் இந்த அமர்வு காலாவதியாகிவிட்டது' என்றே திரையில் வருகிறது. 18 வசதிகளில் எந்த தலைப்புக்கு சென்றாலும், 'மன்னிக்கவும்' என்ற வாசகம் தான் வருகிறது.
இதனால், ஆவண எழுத்தர்கள் இரவு 11 மணி முதல் 12.30 மணி வரையே பதிவுத்துறை இணையதளத்தை பயன்படுத்த முடிகிறது என்று வருத்தத்துடன் கூறுகின்றனர். இதற்கு சர்வர் பிரச்சினையே காரணம் என்று கூறும் பதிவுத்துறை அதிகாரிகள், விரைவில் இந்த பிரச்சினை சரிசெய்யப்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.