தொடர் விடுமுறை; கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது
தொடர் விடுமுறை; கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Published on

கன்னியாகுமரி:

சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில், சுதந்திர தின விழாவைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார இறுதி விடுமுறையை ஒட்டி, கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

குறிப்பாக, வட மாநிலச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. இதனால், கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சியைச் சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர். பின்னர், முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தக் குளியல் போட்டனர்.விவேகானந்தர் நினைவு மண்டபத்தைப் படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத் துறையில் சுற்றுலாப் பயணிகள் வந்து காத்திருந்தனர்.

காலை 8 மணிக்கு படகுப் போக்குவரத்து தொடங்கியது. சுமார் இரண்டு மணி நேரம் சுற்றுலாப் பயணிகள் படகுத் துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்து, விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை மற்றும் கடலில் அமைந்துள்ள கண்ணாடிப் பாலத்தைப் படகு மூலம் ஆர்வமுடன் சென்று பார்வையிட்டு வந்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 10,147 சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடிப் பாலத்தைப் பார்வையிட்டுள்ளனர்.

மேலும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், கொட்டாரம் ராமர் கோயில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோயில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோயில், ராமாயண தரிசன சித்திரக் கண்காட்சிக் கூடம், சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகப் பெருஞ்சுவர், காந்தி நினைவு மண்டபம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால், கடற்கரையில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடலோரப் பாதுகாப்புக் குழுமக் காவலர்கள், சுற்றுலாக் காவலர்கள் மற்றும் உள்ளூர் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com