

குலசேகரம்,
குமரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையால் ரப்பர் தோட்டங்களில் பால்வடிப்பு முடங்கியது. அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என சிறிய ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் வேளாண்மை சார்ந்த பிரதான தொழில்களில் ஒன்றாக ரப்பர் தோட்ட தொழில் உள்ளது. ரப்பர் மரங்களில் பால்வடிப்பு மற்றும் அதை சார்ந்த உப தொழில்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும், வணிகர்களும் ஈடுபட்டுள்ளனர்.
பொதுவாக ரப்பர் மரங்களில் இருந்து அதிக பால் கிடைக்க வேண்டுமெனில் காற்றில் ஈரப்பதமும், சராசரி அளவுக்கு மழைப் பொழிவும் வேண்டும். அதே வேளையில் தொடர் மழை ரப்பர் தோட்டங்களில் பால்வடிப்பு வெகுவாக பாதித்து விடும். தற்போது பெரும்பாலான ரப்பர் தோட்டங்களில் ரப்பர் மரங்களில் இருந்து மழை நாட்களிலும் பால்வடிக்கும் வகையில் மழை நீர் தடுப்பு குடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வகை குடைகள் தொடர் மழைக்கு கை கொடுக்காது.
தற்போது மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் பெரும் ரப்பர் தோட்டங்கள், சிறு ரப்பர் தோட்டங்கள் என அனைத்து வகை ரப்பர் தோட்டங்களிலும் பால்வடிப்பு முடங்கியதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு, ரப்பர் விவசாயிகளுக்கு வருவாய் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
ரப்பர் நிறுவனங்களில் ரப்பர் ஷீட் வரத்து இல்லாததால் ஆலைகளுக்கு போதிய அளவில் ரப்பரை அனுப்ப முடியாத நிலை உள்ளது. அதேபோல் முதிர்ந்த மரங்களை வெட்டி விற்பனை செய்யும் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
நிறுவனமாக செயல்படும் ரப்பர் தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு மழை நாள் நிவாரணமாக குறிப்பிட்ட அளவு ஊதியம் வழங்கப்படும். ஆனால் சிறு தோட்டங்களில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு எந்தவித ஊதியமும் கிடைப்பதில்லை.
இந்த நிலையில் தொடர் மழை காலங்களில் தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என சிறு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.