கொரோனா தடுப்பு நடவடிக்கை நோய் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்க அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்கள் குழு தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா பரவலை தடுப்பது குறித்து ஆலோசனை வழங்க அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களை கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை நோய் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்க அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்கள் குழு தமிழக அரசு அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சித்தலைவர்கள் கூட்டம் கடந்த 13-ந்தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நோய்த்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை வழங்க, சட்டமன்ற கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களை கொண்ட ஒரு ஆலோசனை குழு அமைக்கலாம், என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் அடிப்படையில் அனைத்து சட்டமன்ற கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்படுகிறது.

அந்த குழுவில் இடம் பெற்றுள்ளோர் விவரம் வருமாறு:-

தி.மு.க - டாக்டர் நா.எழிலன், அ.தி.மு.க - டாக்டர் சி.விஜயபாஸ்கர், காங்கிரஸ் - ஏ.எம். முனிரத்தினம், பா.ம.க. - ஜி.கே. மணி, பா.ஜ.க. - நயினார் நாகேந்திரன், ம.தி.மு.க. - டாக்டர் தி.சதன் திருமலைக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி - எஸ்.எஸ். பாலாஜி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி - வி.பி. நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி - தி.ராமசந்திரன், மனிதநேய மக்கள் கட்சி - ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி - ரா.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி - தி.வேல்முருகன், புரட்சி பாரதம் - பூவை ஜெகன் மூர்த்தி.

இந்த ஆலோசனை குழுவானது அவசர அவசியம் கருதி நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் பெற அவ்வப்போது கூடி விவாதிக்கும். இக்குழுவிற்கு பொதுத்துறை செயலாளர் உறுப்பினர் செயலராக செயல்படுவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com