ஊழல் குற்றவாளிகள் இன்னும் களையப்பட வேண்டும் - வானதி சீனிவாசன்

ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்ற நிலையை உருவாக்குவதே நல்லாட்சியின் அடையாளம் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
வானதி சீனிவாசன்
கோப்புப்படம்
Published on

சென்னை,

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு மீது அறப்போர் இயக்கம் அளித்த ஊழல் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. பணிகள் முடிக்கப்படாமலேயே முடிக்கப்பட்டதாகக் கூறி, பல கோடி ரூபாய் அளவிற்கு அரசு பணத்தில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் தகவல்கள், கடந்த கால ஆட்சியில் மக்கள் வரிப்பணம் எவ்வாறு சூறையாடப்பட்டது என்பதற்கான மற்றொரு சாட்சி.

மேலும் இதுபோல முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீதும் ஊழல் புகார் பதிவு செய்யப்பட்டிருப்பது, கடந்த திமுக ஆட்சியின் ஊழல் வேர்கள் எவ்வளவு ஆழமாகப் பரவியுள்ளன என்பதை காட்டுகிறது.

ஊழலற்ற நிர்வாகம், வெளிப்படையான ஆட்சி தருவேன் என்று கூறி தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் முதல்-அமைச்சர் விஜய் அவர்களே, மக்கள் வரிப்பணத்தை சூறையாடி திளைத்துக் கொண்டிருக்கும் முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன். ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்ற நிலையை உருவாக்குவதே நல்லாட்சியின் முதல் அடையாளம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com