பருத்தி இறக்குமதி வரி ரத்து: மத்திய அரசுக்கு நூற்பாலைகள் சங்கம் நன்றி

இந்தியாவின் முன்னணி ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தி மையங்களில் ஒன்றான தமிழ்நாட்டின் 'கொங்கு மண்டலத்திற்கு' இந்த நடவடிக்கை குறிப்பாக பயனளிக்கும் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
வானதி சீனிவாசன்
Published on

சென்னை,

தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

11% சுங்க வரி

தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ராஜ்குமாருடன் இணைந்து, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்தோம். ஜூன் 1, 2026 முதல் அக்டோபர் 30, 2026 வரை இறக்குமதி செய்யப்படும் கச்சாப் பருத்தியின் மீதான 11% சுங்க வரியையும் மற்றும் ஏஐடிசி( AIDC) வரியையும் நிறுத்திவைக்க இந்திய அரசு எடுத்துள்ள முடிவிற்கு, எங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டோம்.

ஜவுளி துறை

சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, உற்பத்தி செலவுகளை குறைக்கவும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கவும், நூல் விலைகளை நிலைப்படுத்தவும், இந்தியாவின் ஜவுளி துறையின் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்தவும் உதவும். மேலும், இந்தியாவின் விரிவடைந்து வரும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் வலைப்பின்னல் மூலம் உருவாகும் புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளவும் ஏற்றுமதியாளர்களுக்கு இந்த முடிவு துணைபுரியும்.

கொங்கு மண்டலம்

இந்தியாவின் முன்னணி ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தி மையங்களில் ஒன்றான தமிழ்நாட்டின் 'கொங்கு மண்டலத்திற்கு' இந்த நடவடிக்கை குறிப்பாக பயனளிக்கும். நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும்பங்காற்றும் ஆயிரக்கணக்கான ஜவுளி நிறுவனங்கள், தொழில்முனைவோர், தொழிலாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு இது பேருதவியாக அமையும்.

முழு ஜவுளி மதிப்பு சங்கிலிக்கும் பயனளித்து, இந்தியாவின் வளர்ச்சி பயணத்தை மேலும் வலுப்படுத்தும் வகையிலான இந்தத் தொலைநோக்கு மற்றும் தொழில்-நட்பு நடவடிக்கையை மேற்கொண்டதற்காக, பிரதமர் மோடிக்கும், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கும் எங்களது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com