புதிய உச்சம் தொட்ட பருத்தி விலை: ஒரு குவின்டால் ரூ.10,761-க்கு விற்பனை

ஒவ்வொரு ஆண்டும் ரூ.9 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை என்பதே பருத்திக்கு அதிகபட்ச விலையாக இருந்து வருகிறது.
புதிய உச்சம் தொட்ட பருத்தி விலை: ஒரு குவின்டால் ரூ.10,761-க்கு விற்பனை
Published on

விழுப்புரம்,

தமிழகத்தின் வட மாவட்டங்களில் விளையும் பருத்தி விற்பனையில் முக்கிய சந்தையாக விளங்குவது, விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் ஆகும். இங்கு நடப்பு ஆண்டில் பருத்தி விற்பனை கடந்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி தொடங்கியது. கடலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்படும் பருத்திக்கு நடப்பு சீசனில் ஒரு குவின்டால் (100 கிலோ) ரூ.8 ஆயிரம் என்ற விலையில் தொடங்கியது.

இதுவரை 124 டன் பருத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும் ரூ.9 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை என்பதே பருத்திக்கு அதிகபட்ச விலையாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு ரூ.9,700 என்பதே அதிகபட்ச விலையாக இருந்தது. ஆனால், தற்போது ஒரு குவின்டால் பருத்தி விலை ரூ.10,761 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, ஒரு கிலோ பருத்தி ரூ.107 என்ற விலையில் விற்பனை ஆகிறது. இது பருத்தி வரலாற்றில் புதிய உச்சம் ஆகும்.

இங்கு பருத்தியை வாங்குவதற்காக திருப்பூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வருகின்றனர். இந்த ஆண்டு தேவை அதிகரித்துள்ளதால், வியாபாரிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால், பருத்தி விலையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அடுத்த மாதம் (ஜூன்) பருத்தி சீசன் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் விலை மேலும் உயரவே வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com