

ராமநாதபுரம்,
இலங்கை தலைமன்னாரில் இருந்து, ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி வரை 28 கிலோ மீட்டர் தூர கடல் பகுதியை நீந்தி சாதனை படைப்பதில் தொடர்ந்து பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூருவில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வரும் டேனிசன் - விருஷாலி தம்பதி, இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை கடலில் நீந்தி சாதனை படைப்பதற்காக ராமேசுவரம் வந்தனர். பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் இருந்து பயிற்சியாளர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோருடன் படகு மூலமாக இலங்கை தலைமன்னார் புறப்பட்டு சென்றனர்.
பின்னர் அதிகாலை 4.30 மணிக்கு தலைமன்னார் கடல் பகுதியில் இருந்து டேனிசன் - விருஷாலி தம்பதி நீந்த தொடங்கினர். இவர்கள் இருவரும் நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை வந்து சேர்ந்தனர். இவர்கள் 28 கிலோ மீட்டர் தூர கடல் பகுதியை 11 மணி நேரம் 15 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்து உள்ளனர். மேலும் தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே ஜோடியாக நீந்தி சாதனை படைத்த முதல் தம்பதி என்ற சிறப்பையும் பெற்றனர். இருவரையும் தனுஷ்கோடி வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் கடலோர போலீசார் வாழ்த்தினர்.
இதுகுறித்து பெங்களூரு தம்பதி கூறுகையில், தனுஷ்கோடி கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதுடன், கடல் சீற்றமாக இருந்தது. நீரோட்டமும் அதிகமாக இருந்தது. இதனால் எங்களால் வேகமாக நீந்த முடியவில்லை. இதனால் திட்டமிட்டதை விட ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமாகவே நீந்திவர முடிந்தது. இருந்தாலும் இந்த சாதனையை நினைத்து மகிழ்கிறோம் என்றனர்.