காவல்துறைக்கு எதிரான நீதிமன்ற உத்தரவுகளை காவல்துறை பாடநூலில் சேர்க்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாடு காவல் துறையினருக்கு இப்போது மிக முக்கியமாக தேவைப்படுவது சட்ட அறிவும், மனிதநேயமும், பொதுமக்களை அணுகும் விதம் குறித்த புரிதலும்தான் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு காவல் துறையினருக்கு இப்போது மிக முக்கியமாக தேவைப்படுவது சட்ட அறிவும், மனிதநேயமும், பொதுமக்களை அணுகும் விதம் குறித்த புரிதலும்தான். அதற்கான பயிற்சி அவர்களுக்கு போதவில்லை. இதே மனநிலையோடு காவலர்கள் பணியை தொடர்கிற நிலை உருவானால் பொதுமக்களின் நிம்மதி கேள்விக்குரியதாகி விடும் சூழல் இருக்கிறது.
ஒவ்வொரு முறையும் "சிவகங்கை அஜீத்குமார்"களின் கொடூர மரணங்களின் போது மட்டும் ஒன்று கூடி, விடிய விடிய பேசி கலைந்து போவது தீர்வாகாது.
முதற்கட்டமாக காவலர் பயிற்சிக்கான பாடநூலில் உயர்நீதிமன்ற (மதுரை கிளை) நீதியரசர்கள் எஸ்.எம்.சுப்பிரமணியன், ஏ.டி.மரிய கிளாட் (1.7.2025) ஆகியோர் வாசித்த காவல்துறைக்கு எதிரான உத்தரவை காவலர் பயிற்சிக்கான பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும்.
அதேபோல் தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டியும், விமர்சித்தும் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு நீதியரசர்கள் பிறப்பித்த உத்தரவுகளையும் காவல் துறையினருக்கான பயிற்சி நூலில் சேர்க்க வேண்டும். போதுமான கால அவகாசமும் சூழலும் அரசுக்கு இருக்குமென்றால் தனி பாடத்திட்டமாகவே இதை கொண்டு வரலாம்.
சமூகப்பார்வை கொண்ட கல்வியாளர்கள், சட்டத்துறையின்பால் மிகுந்த மதிப்பு கொண்டவர்கள், சட்டம் படித்த - காவல் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், கல்வியாளர்கள், சட்டமன்ற - பாராளுமன்ற மூத்த உறுப்பினர்களை உள்ளடக்கிய பாடத்திட்ட உருவாக்கக்குழுவை அமைத்திட தமிழ்நாடு அரசு விரைந்து முன்வரவேண்டும்; அதற்கான அறிவிப்பை உடனடியாக அறிவிக்க வேண்டும்.
மாதத்தின் முதல் நாளன்றே (1.7.2025) நீதியரசர்கள் பிறப்பித்த உத்தரவில், "தனிப்படை போலீசாருக்கு இந்த வழக்கை மாற்றியது யார்? யாருடைய உத்தரவின் பேரில் அவர்கள் விசாரணை நடத்தினர், சமூக வலைதளங்களில் வருகிற தகவல்களின் அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்த இயலுமா?" என்று கேட்டதோடு, "உயரதிகாரிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் முழுமையான விவரங்கள் மறைக்கப்படுகின்றன.
விசாரணை என்ற பெயரில் ஒரு நபரை அடித்து கொலை செய்திருக்கிறார்கள். காவல்துறையின் பணி புலனாய்வு செய்வது மட்டுமே" என்றும் காட்டமாக உத்தரவில் சுட்டியிருக்கிறார்கள்.
சிவகங்கை மாவட்டம், திருபுவனம் - மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜீத்குமார், காவல்துறை விசாரணை முறையால்தான் இறந்து போனார் என்பதை அனைத்து தரப்பும் உறுதி செய்துள்ளது.
அஜீத்குமாரின் உடற்கூராய்வு முடிவில், அவரது உடலின் 44 பகுதிகளில் காயங்கள் உள்ளதை காட்டியுள்ளது. "உடலில் எந்த பாகமும் விட்டு வைக்கப்படாமல் காயப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மாநிலம் (தமிழ்நாடு) தனது குடிமகனை கொலை செய்திருக்கிறது. வழக்கின் சாட்சியங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. அஜீத்குமாரின் பிறப்புறுப்பு, வாய், காதுகளில் மிளகாய்ப்பொடி தூவப்பட்டிருக்கிறது" என்பதையெல்லாம் வேதனையோடு சுட்டிக் காட்டியிருக்கும் நீதியரசர்கள், சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி, சட்டத்தை வளைத்தும் உடைத்தும் ஒரு குடிமகன் மீது காவல்துறையினர் வெறித்தனமாக பாய்ந்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
காவலர்களுக்கு பணிச்சுமையும், மன அழுத்தமும் அதிகம் என்பதால், யோகா மற்றும் தியானப்பயிற்சிகளை தமிழ்நாடு காவல் தலைமையால் கொடுக்கப்பட்டதை, சில ஆண்டுகள் முன்பு செய்தியாக பார்க்க முடிந்தது. ஒருசில இடங்கள் தவிர வேறெங்கும் அது போன்ற பயிற்சிகளுக்கு இப்போது காவலர்கள் அனுப்பப்படுவது இல்லை என்றே தகவல்கள் வருகிறது. அதை மீண்டும் முன்புபோலவே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






