

செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகளால் வாகன போக்குவரத்தில் சிரமம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆப்பூர் ஊராட்சியையொட்டி நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை ஒரகடம், வல்லக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் வழியாக பெங்களூரு மற்றும் வடமாநிலங்களுக்குச் செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் இந்த சாலையில் ஏராளமான மாடுகள் நடுரோட்டிலேயே படுத்துக் கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
பகல் நேரங்களில் ஒருவழியாக மாடுகளைக் கடந்து சென்றாலும், இரவு நேரங்களில் சாலையில் படுத்திருக்கும் மாடுகளை கண்டறிந்து வாகனங்களை ஓட்டுவது மிகவும் சிரமமாக இருப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.