

சென்னை,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
நேற்றைய தினம் தஞ்சாவூரில் காவிரி நதி நீர் உரிமை மற்றும் மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக, திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பெண் பற்றி கண்ணியக்குறைவாக பேசியிருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.
அவர் வகித்து வரும் எதிர்கட்சித் தலைவர் என்ற உயரிய பொறுப்புக்கு அது உகந்ததல்ல. அவர் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து, இன்று (04.08.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.
நாளை (05.08.2026) கூடும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2026-27ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது, எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இருந்து, ஜனநாயக கடமை ஆற்றும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதையும் அரசு கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.