

சென்னை,
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை காவலில் எடுத்துவிசாரிக்கக் கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனு அளித்துள்ளனர்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டி.டி.சி.பி., சி.எம்.டி.ஏ.. பிற சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்று தருவதாக கூறி ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதல் வகுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.
அவரை நேற்று சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரம் வரை இந்த சந்திப்பு நடந்தது. சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட தி.மு.க.வினர் உடன் இருந்தனர்.
இந்த நிலையில் அன்பில் மகேஷை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இதனிடையே தனக்கு ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஆரம்பத்தில் சாதாரண பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு பின்னர் ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன் பிரிவு 7 மற்றும் 12-ன் கீழ் மாற்றப்பட்டு குற்றம்சாட்டப்பட்டவர்களில் 5-வது நபராக எனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திட்டமிட்டு என் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனி நபர்கள் பணம் வசூலித்ததாக மட்டுமே போலீசார் குற்றம்சாட்டி உள்ளனர். நான் நேரடியாக லஞ்சம் பெற்றதாகவோ அல்லது சட்டவிரோதமாக பயன்பெறும் வகையில் செயல்பட்டதாகவோ எந்த ஆதாரத்தையும் போலீசார் தெரிவிக்கவில்லை.
நான் லஞ்சம் பெற்றதாக எந்த ஒரு சாட்சியமும் இல்லை. சாட்சிகளின் வாக்குமூலத்தின்படி சிலர் என் பெயரை பயன்படுத்தி பணம் வசூலித்துள்ளனர் என்பது மட்டுமே தெளிவாகிறது.
போலீசார் விசாரணைக்கு அழைத்தபோது நேரில் ஆஜராகி முழு ஒத்துழைப்பு அளித்துள்ளேன். நான் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு தொடர் மருத்துவ கண்காணிப்பு தேவைப்படுகிறது. எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நாளை (வியாழக்கிழமை) சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை போலீஸ் காவலில் எடுக்க சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று (புதன் கிழமை) மனு அளித்துள்ளது. இதன்படி 5 நாள் காவல் கேட்டு சிறப்பு நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.