

திருச்செந்தூர்,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள்தோறும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
கோடை விடுமுறையை ஒட்டி கடந்த 2 வாரமாக திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. வரும் வாரம் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் தேர்வுகளில் வெற்றி பெறவும், உயர் கல்வியில் இடம் கிடைக்கவும், வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டியும் பெற்றோர் குடும்பத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தவாறு உள்ளனர். இன்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் கோவிலில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கோவில் நடை வழக்கம்போல் இன்று காலை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 5 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.