

தூத்துக்குடி,
தூத்துக்குடி மக்களின் தந்தை என போற்றப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ்யின் 157 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மீன்வளம் மற்றும் மீன்வர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் பூங்கா அருகில் அமைந்துள்ள தூத்துக்குடி மக்களின் தந்தை என போற்றப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ்யின் 157 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு இன்று தமிழ்நாடு அரசு சார்பில் அன்னாரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மீன்வளம் மற்றும் மீன்வர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத். மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன், தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-
குரூஸ்பர்னாந்து தூத்துக்குடியில் 15.11.1869ஆம் ஆண்டு ஜான் சாந்த குரூஸ்பர்னாந்தின் இரண்டாவது மகனாக பிறந்தார். உழைப்பால் உயர்ந்த உத்தமர் அறிவு கூர்மையும் திறமையும் மிக்கவர். எந்த எதிர்ப்பு வந்தாலும் தான் செய்ய கூடிய காரியம் நல்லதாகவும் பலருக்கும் பயன் உள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று செயல்பட்டவர். இவர் தொபியாங் அம்மாள் பர்னாந்து என்பவரை திருமணம் செய்து 4 ஆண் பிள்ளைகளையும், 3 பெண் பிள்ளைகளையும் பெற்றார்.
தூத்துக்குடி நகராட்சி தலைவராக 21.12.1909 முதல் ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டு தூத்துக்குடி நகரில் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டவர் குரூஸ் பர்னாந்து ஆவார். தூத்துக்குடி நகரமக்கள் சுகாதாரமற்ற கிணற்று நீரை குடிக்கவும். சமையலுக்கும் பயன்படுத்தி வந்தனர். இதன் காரணமாக காலரா, பிளேக் போன்ற கொடிய நோய்களால் பலர் உயிர் இழந்தனர். ஏராளமானோர் பல்வேறு நோய்களுக்கும் உள்ளாகினர். மேலும் குடிநீர் பஞ்சம் பெரும் பிரச்சனையாக இருந்தது.
தூத்துக்குடி மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு குரூஸ் பர்னாந்து இலங்கையில் கொழும்பு துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் குடிநீர் கொண்டு வந்தார். ஆனாலும் குடிநீர் பிரச்சனையை பூர்த்தி செய்ய முடியவில்லை. பின்னர் கடம்பூரிலிருந்து ரெயில் மூலம் குடிநீர் கொண்டு வந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அதுவும் போதுமானதாக இல்லை. கோரம்பள்ளம் குளத்திலிருந்து கால்வாய் மூலம் குடிநீர் கொண்டு வந்து நகரின் பல்வேறு இடங்களில் வட்டத்தெப்பம். வட்டக்கிணறுகள். மூடிக்கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. ஆயினும் இதுவும் பொது மக்களின் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு போதுமானதாக இல்லை.
கடற்கரை நகரமான தூத்துக்குடி நகரமக்களின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண 24 மைல் தூரமுள்ள தாமிரபரணி ஆற்றுப்படுகையில் கிணறுகள் தோண்டி வல்லநாட்டில் சுத்திக்கரிப்பு செய்து பெரிய குழாய்கள் மூலம் தூத்துக்குடி நகரத்திற்கு கொண்டு வந்து குடிநீர் வழங்கும் திட்டத்தை வெற்றிக்கரமாக செயல்படுத்தினார். இதன் காரணமாக இன்றளவும் தூத்துக்குடி நகர மக்களின் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்பட்டதற்கு குரூஸ் பர்னாந்து எடுத்த சீறிய முயற்சிதான் காரணமாகும்.
வல்லநாட்டிலிருந்து பைப்லைன் மூலம் குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்கு வித்திட்டவர் குரூஸ் பர்னாந்து ஆவார். இவர் ராவ் பகதூர் என்ற பட்டம் பெற்றவர் ஆவார். இன்று தூத்துக்குடி மாபெரும் மாநகரமாவதற்கு குரூஸ் பர்னாந்தீஸ் தான் காரணம். ஆதலால் தூத்துக்குடி "மக்களின் தந்தை" என்று போற்றப்படுகிறார் என மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கருப்பண ராஜவேல், தூத்துக்குடி வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.