

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அம்மா உணவகத்தில் அதிக விலைக்கு சாப்பாடு விற்பனை செய்வதாக புகார் வந்தது. மேலும் பணி நேரத்தில் பெண் தொழிலாளர்கள் தூங்குவதாகவும், சமைக்க பயன்படுத்தப்படும் காய்கறிகளை எடுத்து செல்வதாகவும் புகார் எழுந்தது.
இது பற்றி அறிந்ததும் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேற்று திடீரென சென்று கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அம்மா உணவகத்தை ஆய்வு செய்தார். மேலும் அங்கு வேலை செய்த பெண் தொழிலாளர்களிடம் புகார் பற்றி விசாரணை நடத்தினார். அங்கு சாப்பிட வந்த பொதுமக்களிடம் உணவை அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்களா? என்று கேட்டறிந்தார்.
அப்போது பெண் தொழிலாளர்கள் உணவு கூடத்தில் தூங்கும் புகைப்படத்தை காட்டி, அவர்களை கண்டித்தார். காய்கறிகளை எடுத்து செல்லும் புகைப்படத்தை காண்பித்து, இது பற்றி விசாரித்தார். பின்னர் இது பற்றி மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நிருபர்களிடம் கூறுகையில், அம்மா உணவகத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், தரமான உணவு சமைக்க வில்லை என்று புகார் வந்தது. 5 ரூபாய் சாம்பார் சாதத்தை 10 ரூபாய்க்கு விற்பனை செய்வதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட 3 பெண் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆணையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் மாலதி, மாநகர செயலாளர் ராஜா, மண்டலக்குழு தலைவர் சங்கீதா, தகவல் தொழில்நுட்ப பிரிவு கார்த்திக், பகுதி துணை செயலாளர் லெனின் ஆகியோர் உடனிருந்தனர்.