வடலூர் சத்திய ஞானசபை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்


வடலூர் சத்திய ஞானசபை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
x
தினத்தந்தி 4 Feb 2025 3:14 PM IST (Updated: 4 Feb 2025 4:16 PM IST)
t-max-icont-min-icon

சத்திய ஞானசபை வளாகத்தில் புதிய மரக்கன்றுகளை நட்டு வளர்க்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியை சுற்றி நன்கு வளர்ந்த நிலையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மரங்களை இராட்சத எந்திரங்களைக் கொண்டு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். பெருவெளி பகுதியில் நிழல் தரும் வகையில் வளர்ந்திருந்த அந்த மரங்கள் காரணமே இல்லாமல் வெட்டி வீழ்த்தப்படுவது கண்டிக்கத்தக்கது.

பிப்ரவரி 11ம் தேதி தைப்பூச பெருவிழா நடைபெற உள்ள நிலையில் அடிப்படை வசதிகளை செய்வதற்காகத் தான் மரங்கள் பிடுங்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசப் பெருவிழா கொண்டாடப்படும் நிலையில் எந்த ஆண்டும் இது போல் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டதில்லை எனும் போது இந்த ஆண்டு மட்டும் மரங்களை வெட்ட வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது?

தைப்பூச நாளில் வடலூரில் வள்ளலார் ஜோதி தரிசனத்தைக் காண்பதற்காக 10 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான பக்தர்கள் கூடினாலும், அனைவரும் எந்த சிக்கலும், இடையூறும் இல்லாமல் ஜோதி தரிசனம் காண்பதற்கு வசதியாகத் தான் 70 ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவு கொண்ட பெருவெளியில் எந்த ஆக்கிரமிப்பும் செய்யக்கூடாது என்று வள்ளலாரே கூறியிருந்தார். அதன்படியே இதுவரை பராமரிக்கப்பட்டும் வந்தது. அத்தகைய பெருவெளியை வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்காக ஆக்கிரமித்து விட்டு, கூடுதல் வசதிகளை செய்து தருவதாகக் கூறி மரங்களை அகற்றுவது முரண்பாடுகளின் உச்சம் ஆகும்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடியதாக வள்ளலார் கூறியிருக்கிறார். அவரது நிலத்தில் வளர்ந்திருந்த மரங்களை வெட்டி வீழ்த்துவது வள்ளலாரால் வெறுக்கப்பட்ட உயிர்க்கொலை ஆகும். வள்ளலாரை மதிக்கும் அரசாக இருந்தால் சத்திய ஞானசபை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்; அந்தப் பகுதியில் புதிய மரக்கன்றுகளை நட்டு வளர்க்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story