

சென்னை,
சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த 2013 முதல் 2016 காலகட்டத்தில் 407 இடங்களில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. தற்போது 383 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. அம்மா உணவகங்களில் ஒரு இட்லி ரூ.1-க்கும், சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம் உள்ளிட்ட கலவை சாதம் ரூ.5-க்கும், 2 சப்பாத்தி ரூ.3-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விலை குறைவு மற்றும் தரமான உணவு வகைகள் கிடைப்பதால் நாள் தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அம்மா உணவகங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கேஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பல்வேறு பகுதிகளில் ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான ஓட்டல்கள் மின்சார அடுப்பு மற்றும் விறகு அடுப்புகளை வைத்தும் உணவு சமைத்து வருகின்றது.
இதேபோல, சென்னையில் செயல்பட்டு வரும் 383 அம்மா உணவகங்களில் பலவற்றில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை, சேத்துபட்டு கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை ஆகியவற்றில் உள்ள அம்மா உணவகங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விறகு அடுப்புக்கு மாறியுள்ளன.
முன்பெல்லாம் 2 நாட்களுக்கு ஒருமுறை சிலிண்டர் வரும், ஆனால் தற்போது சிலிண்டர் வரவில்லை. எனவே, விறகு வைத்து உணவு சமைத்து பொது மக்களுக்கு வினியோகித்து வருவதாக அம்மா உணவக ஊழியர்கள் தெரிவித்தனர். வழக்கமான நேரத்தைவிட காலையில் முன்கூட்டியே வேலைக்கு வந்து உணவை தயார் செய்கிறோம் எனவும், வெயிலால் சமைக்க கூடுதல் நேரம் தேவைப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.