தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
Published on

சரிசெய்யப்பட்டது

தோவாளை ஒன்றியம் சகாயநகர் ஊராட்சிக்கு உட்பட்ட வீரமார்த்தாண்டன்புதூர் குளத்துக்கு செல்லும் பாதையில் மின்கம்பி அறுந்து விழுந்து பல நாட்கள் ஆகியும் அது சரி செய்யப்படாமல் இருந்தது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பியை சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தொவித்தனர்.

பஸ்வசதி தேவை

புகழ்பெற்ற சுற்றுலா தலமாக கன்னியாகுமரி விளங்கி வருகிறது. கன்னியாகுமரி பஸ் நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு இரவு 9 மணியில் இருந்து 10 மணிக்கு இடையே பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள், வேலைக்கு வந்து விட்டு ஊர் திரும்பும் தெழிலாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, இரவு 9 மணிக்கு மேல் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-லிங்கேஷ்வரன், கன்னியாகுமரி. 

சேதமடைந்த சாலை

உண்ணாமலைக்கடை பேரூராட்சிக்குட்பட்ட காஞ்சிரகோடு ஜங்ஷனில் இருந்து மாமூட்டுக்கடைக்கு செல்லும் சாலை உள்ளது. இ்ந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்க எடுக்க வேண்டும்.

-தே.ஜாண் ஜெயசிங், காஞ்சிரகோடு. 

வீணாகும் குடிநீர்

ராஜாக்கமங்கலம் -ஈத்தாமொழி வழியாக செல்லும் மேற்கு கடற்கரை சாலை உள்ளது. இந்த சாலையில் ராஜாக்கமங்கலம் துணை மின்நிலையத்திற்கு முன்பு கூட்டுகுடிநீர் திட்டத்திற்காக சாலையின் நடுவே பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாகி சாலையில் பாய்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே துரித நடவடிக்கை எடுத்து குடிநீர் வீணாகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆ.நாகராஜன், ராஜாக்கமங்கலம். 

நாய்கள் தொல்லை

குளச்சல் அண்ணாசிலை பகுதியில் அதிக அளவில் நாய்கள் சுற்றித்திரிகின்றன. அவ்வாறு சுற்றித்திரியும் நாய்கள் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகளை கடிக்க துரத்துகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.முகம்மது சபீர், குளச்சல். 

தொற்றுநோய் பரவும் அபாயம்

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட தொல்லவிளை ஆரம்ப சுகாதார நிலையம் பின்புறம் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் கழிவுநீர் ஓடையில் சாக்கடை தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் வடிந்தோட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேஷ், தொல்லவிளை. 

சுகாதார சீர்கேடு

அகஸ்தீஸ்வரத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையின் அருகில் பூஜை புரைவிளை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சாலையோரமாக சிலர் வாகனங்களில் கொண்டு வந்து குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சி.ராம்தாஸ், சந்தையடி.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com