ஜி-பே தகராறில் பால் பண்ணை உரிமையாளர் கத்தியால் குத்திக்கொலை: வாலிபர் கைது

தூத்துக்குடி மாவட்டம், நாரைக்கிணறு அருகே உள்ள ஒரு மளிகை கடையில் வாலிபர் ஒருவர் பொருட்கள் வாங்கிவிட்டு, அதற்கு பணம் ஜி-பே செய்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
பால் பண்ணை உரிமையாளர் கத்தியால் குத்திக்கொலை: வாலிபர் கைது.
Published on: 

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், நாரைக்கிணறு அருகே ஜி-பே செய்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பால் பண்ணை உரிமையாளரை கத்தியால் குத்திக்கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பால் பண்ணை உரிமையாளர் கொலை

தூத்துக்குடி மாவட்டம், நாரைக்கிணறு அருகேயுள்ள கே.கைலாசபுரம் பகுதியைச் சேர்ந்த நடேஸ்குமார் (வயது 44), அப்பகுதியில் பால்பண்ணை நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள ஒரு கடை அருகே அவர் நின்று கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் குத்திக் கொலை செய்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த நாரைக்கிணறு போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த நடேஸ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஜி-பே செய்ததில் தகராறு

போலீசாரின் விசாரணையில் புதியம்புத்தூர் அருகே உள்ள புதுப்பச்சேரி கிராமம், வடக்கு தெருவை சேர்ந்த வெற்றிவேல் மகன் மகாராஜன்(35) என்பவர் அங்குள்ள ஒரு கடையில் மளிகை பொருட்கள் வாங்கிவிட்டு ஜி-பே செய்தாராம். அதில் பணம் குறைவாக கொடுத்ததால் கடைக்காரருக்கும், மகாராஜனுக்கும் தகராறு ஏற்பட்டது.

வாலிபர் கைது; கத்தி பறிமுதல்

இந்த தகராறை நடேஸ்குமார் விலக்கி விட்டுள்ளார். அப்போது மகாராஜனை அவர் கையால் தாக்கினாராம். இதனால் ஆத்திரமடைந்த மகராஜன், அவரை கத்தியால் குத்திக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மகராஜனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்தனர்.

X