காதல் விவகாரத்தில் மகள் கொலை: காத்திருந்து பழிதீர்த்த தந்தை

இளம்பெண்ணின் தந்தை மற்றும் குடும்பத்தினர் இந்த சம்பவத்திற்கு பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததாக தெரிகிறது.
காதல் விவகாரத்தில் மகள் கொலை: காத்திருந்து பழிதீர்த்த தந்தை
Published on

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் அருகே உள்ளது மேல களக்குடி. இந்த ஊரை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவர், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆவார். இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருந்தனர். இதில் மகள் காவியா(வயது 26), எம்.ஏ., பி.எட். வரை படித்திருந்தார்.

அவர் அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வந்தார். காவியா மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (26) என்பவர் கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அஜித்குமார் பெயிண்டர் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், காவியாவின் பெற்றோர் அவருக்கு உறவினரான அத்தை மகனுடன் திருமணம் பேச முடிவு செய்து நிச்சயதார்த்தம் நடத்தினர்.

இந்த தகவலை அஜித்குமாரிடம் காவியா ஆரம்பத்தில் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. பின்னர் நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்களை வீடியோ கால் அழைப்பின் மூலம் அஜித்குமாரிடம் காவியா காட்டியதாக தெரிகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த அஜித்குமார், கடந்த நவம்பர் மாதம் 28-ம் தேதி காலை காவியா வழக்கம்போல் பள்ளிக்குச் செல்ல சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த போது அவரை வழிமறித்து, "என்னை காதலித்துவிட்டு வேறு ஒருவருடன் எப்படி நிச்சயம் செய்யலாம்" என்று கூறி, அவர் வைத்திருந்த கத்தியால் காவியாவை சரமாரியாக குத்தினார்.

இதில் பலத்த காயமடைந்த காவியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், மகளை இழந்த துயரத்தில் இருந்த காவியாவின் தந்தை மற்றும் குடும்பத்தினர் இந்த சம்பவத்திற்கு பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை அஜித்குமார் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, காவியாவின் தந்தை உட்பட நான்கு பேர் அவரது வீட்டுக்குள் புகுந்துள்ளனர். அப்போது அவர்கள் அரிவாளால் அஜித்குமாரை சரமாரியாக வெட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, அஜித்குமாரை வெட்டிக்கொன்ற காவியாவின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் நால்வரும் நேரடியாக அம்மாபேட்டை காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தனர். போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com