தர்மபுரி அருகேமொபட்டில் இருந்து கீழே விழுந்த 4 மாத ஆண் குழந்தை பலி

தர்மபுரி அருகேமொபட்டில் இருந்து கீழே விழுந்த 4 மாத ஆண் குழந்தை பலி
Published on

தர்மபுரி அருகே மொபட்டில் இருந்து கீழே விழுந்த போது காயமடைந்த 4 மாத ஆண் குழந்தை பலியான சம்பவம் தொடர்பாக மதி கோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

4 மாத குழந்தை காயம்

தர்மபுரி குண்டல்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 32). ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி திவ்யா. இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் குழந்தை படுத்திருந்த இடத்தில் ஒரு பூரான் சென்றது.

இதனால் குழந்தையை பூரான் கடித்திருக்கலாம் என்ற சந்தேகம் அடைந்த திவ்யா தனது தாயார் மங்கம்மாளுடன் குழந்தையை தூக்கிக் கொண்டு மொபட்டில் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றார். இந்த மொபட்டை அவர் ஓட்டிச் சென்றபோது தர்மபுரி- அரூர் சாலையில் நாய் குறுக்கே ஓடியது. இதனால் அவர்கள் சென்ற மொபட் நிலைதடுமாறி கீழே கவிழ்ந்தது. இதில் கீழே விழுந்த திவ்யா, குழந்தை மற்றும் மங்கம்மாளுக்கு காயம் ஏற்பட்டது.

பலி

இதையடுத்து தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை சேர்த்து சிகிச்சை அளித்தனர். பின்னர் குழந்தை மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது. அங்கு சிகிச்சை அளித்தும் பலன் இன்றி குழந்தை இறந்தது. இது பற்றி தகவல் அறிந்த மதிகோன்பாளையம் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை பலியான சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com