

சென்னை,
நடிகர் விவேக் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் கொரோனா தடுப்பூசி போட்ட மறுநாள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை மருத்துவமனையில் பார்க்கப்போன நடிகர் மன்சூரலிகான், பரபரப்பு பேட்டி அளித்தார். கொரோனா தடுப்பூசி போட்டதால்தான், விவேக் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார் என்று அவர் கருத்து வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் பரவியது. மேலும் கொரோனா நோய் தடுப்புக்கு அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் பற்றியும் அவர் விமர்சித்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் விவேக் மரணம் அடைந்து விட்டார். அவரது மரணத்துக்கும், கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என்றும், அவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
விவேக் மாரடைப்பால் பாதிக்கப்பட்டது பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர் மன்சூரலிகான் மீது போலீசில் புகார் கொடுக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்தார். அதன்படி நடிகர் மன்சூரலிகான் மீது மாநகராட்சி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று முன்தினம் இரவு பரபரப்பு புகார் மனு கொடுக்கப்பட்டது. அந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் என்னை ஜெயிலுக்கு அனுப்பினாலும் கவலை இல்லை என்றும்,நடிகர் மன்சூரலிகான் தனது பேட்டியில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.