

சென்னை,
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது என்று முதல்-அமைச்சர் அறிவித்திருப்பது துரதிஷ்டவசமானது என்று ஈஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பாக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும் அதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பசுமை விமான நிலையமாக பரந்தூரில் அமைப்பதற்கான திட்டங்கள் திட்டமிடப்பட்டு செயலாக்கத்திற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
ஐந்து ஆண்டு காலமாக இடத்தை தேடி நான்கு இடங்களை மத்திய அரசின் ஒப்புதலுக்கு கடந்த கால அரசு கொடுத்தது. அதிலே பரந்தூர் தான் தகுதியான இடமென்று இந்திய விமான போக்குவரத்து துறை ஒப்புதல் கொடுத்தது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழுமையாக முடியும் தருவாயில் இருந்தது.
விமான நிலையத்திற்கான ஏற்பாடுகள் மட்டுமில்லாமல் விமான நிலையத்தை சென்னை மாநகரத்தோடு இணைக்கும் மெட்ரோ ரெயில் திட்டம், சென்னை - பெங்களூர் விரைவு வழி தடத்தோடு இணைக்கும் திட்டம், செய்யாறு மற்றும் ஒரகடம் போன்ற தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியை நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்கும் திட்டம், சென்னை மாநகரத்தோடு இணைக்க விரைவுச்சாலை வசதி என்று பல்வேறு ஏற்பாடுகளும் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டு விட்டன.
இந்த சூழலில் பரந்தூர் விமான நிலையத்தை கைவிட்டு விட்டு மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வோம் என்று அறிவித்திருப்பது தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
வேறு பல இடங்களை பார்த்து இந்திய விமான போக்குவரத்து துறையின் ஒப்புதலை பெற்று தேவையான நிலங்களை கையகப்படுத்தி புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என்றால் இன்னும் 15 ஆண்டுகள் ஆகி போகும். அரசினுடைய அறிவிப்பை பார்க்கும் பொழுது இரண்டாவது விமான நிலையம் சென்னைக்கு கொண்டு வரும் திட்டமே இந்த அரசுக்கு அறவே இல்லை என்று தோன்றுகிறது.
பெங்களூர் மற்றும் ஹைதராபாத் சர்வதேச விமான நிலையங்கள் தற்போது சென்னை விமான நிலையத்தோடு ஒப்பிடுகையில் மிக பெரும் வளர்ச்சியை பெற்றிருக்கின்றன. பரந்தூர் விமான நிலையத்தை தடுத்திருப்பது தமிழக எல்லை பகுதியில் ஆந்திர அரசு திட்டமிடுகின்ற விமான நிலைய கோரிக்கைக்கு வலு சேர்க்கும். தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் இருப்பவர்கள் கர்நாடகாவில் இருக்கின்ற பெங்களூர் விமான நிலையத்தை பயன்படுத்துவது போல சென்னை பகுதியிலும், வட மாவட்டங்களிலும் உள்ள மக்கள் உருவாக போகும் ஆந்திர சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்துவார்கள்.
அதன்மூலம் கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலங்களுடைய பொருளாதார வளர்ச்சிக்காக தமிழ்நாட்டின் வளர்ச்சியை விட்டு கொடுப்பதாக அமையும். தமிழகத்தினுடைய தொழில்துறையினரை தமிழக அரசு கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழக முதல்-அமைச்சர் பரந்தூர் விமான நிலைய விசயத்தில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.