

சென்னை:
முதல்-அமைச்சர் விஜய் குறித்து அவதூறான மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக அவர் சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மிசா சிறைவாசம் குறித்து முதல்-அமைச்சர் விஜய் சில கருத்துகளைத் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, முதல்-அமைச்சர் விஜய் குறித்து வசந்தம் கார்த்திகேயன் அவதூறான மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியதாக தமிழக வெற்றிக் கழகத்தினர் புகார் அளித்தனர்.
தவெகவினர் அளித்த புகாரின் அடிப்படையில், வசந்தம் கார்த்திகேயன் மீது சைபர் கிரைம் மற்றும் உள்ளூர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சென்னை அண்ணா நகர் போலீசார் அவருக்குச் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இதையடுத்து, வசந்தம் கார்த்திகேயன் சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் போலீசார் வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.