

சென்னை,
அந்தமான் தீவுகளில் கடந்த 16-ந்தேதி தொடங்கிய தென்மேற்கு பருவக்காற்று கேரளாவில் கடந்த 26-ந்தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. இந்தநிலையில் அரபிக்கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக தென்மேற்கு பருவக்காற்று கேரளாவை வந்தடைவதில் சாதகமான நிலை இல்லாமல் இருக்கிறது.
அந்த வகையில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு கேரளாவில் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. வழக்கமாக ஜூன் 1-ந்தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்.
இந்த முறை 3 அல்லது 4-ந்தேதியையொட்டி பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், பருவமழையின் தொடக்கம் தீவிரமாக இல்லாமல் வலுகுறைந்து காணப்படும் என்றே வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், தமிழகம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று (வியாழக்கிழமை) நீலகிரி. கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் காற்றுடன் கனமழையும், தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.