தாமதமாகும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை! - எஸ்டிபிஐ கட்சி கண்டனம்!

மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
எஸ்டிபிஐ கட்சி
Published on: 

சென்னை,

164 மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளனர். ஆனால், வெறும் 65 மாணவர்களுக்கு மட்டுமே ரூ.19.53 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதனால், மீதமுள்ள மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என அச. உமர் பாரூக் தெரிவித்துள்ளார்.

அவல நிலைக்கு தள்ளப்பட்ட மாணவர்கள்

இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொறுப்புத் தலைவர் அச. உமர் பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் 'அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்' கீழ் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெற்றுள்ள பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, பல மாதங்களாகியும் உதவித்தொகை விடுவிக்கப்படாமல் இருப்பதால் அவர்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, கனடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உயர்கல்வி பயிலச் சென்றுள்ள நமது மாணவர்கள், தமிழக அரசின் உதவித்தொகை சரியான நேரத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் வெளிநாடுகளுக்குச் சென்றனர். ஆனால், அதிகாரிகளின் மெத்தனப் போக்காலும், நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் நீண்டகாலச் சரிபார்ப்பு என்ற பெயரில் ஏற்படும் தேவையற்ற காலதாமதத்தாலும், மாணவர்கள் கல்விக் கட்டணம் மற்றும் தங்குமிட வாடகை கூடச் செலுத்த முடியாமல் வீட்டை விட்டு வெளியேற்றப்படும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

65 மாணவர்களுக்கு மட்டுமே நிதி விடுவிப்பு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி, 2026-27 கல்வியாண்டில் 365 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் 164 மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளனர். ஆனால், வெறும் 65 மாணவர்களுக்கு மட்டுமே ரூ.19.53 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதனால், மீதமுள்ள மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த இம்மாணவர்களின் கல்வி தடைபடக் கூடாது என்பதற்காக, தமிழகத்தில் உள்ள அவர்களின் பெற்றோர்கள் தங்கள் சேமிப்புகளைக் கரைத்தும், வீட்டிலிருந்த தங்க நகையை அடகு வைத்தும், அதிக வட்டிக்குக் கடன் வாங்கியும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். விளிம்புநிலை மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்கக் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தில், நிதியை விடுவிப்பதில் ஏற்படும் இத்தகைய தாமதம், அத்திட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சிதைப்பதாக அமைந்துள்ளது.

அலட்சியம் காட்டுவது கண்டனத்திற்குரியது

சமூக நீதி பேசும் தமிழக அரசு, ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் உயர்கல்வி விஷயத்தில் இத்தகைய அலட்சியம் காட்டுவது கண்டனத்திற்குரியது.

ஆகவே, தமிழக அரசும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையும் இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, நிலுவையில் உள்ள அனைத்து மாணவர்களுக்கான உதவித்தொகையையும் எந்தவித தாமதமுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

X