

சென்னை,
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றூ எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. இன்றைய போராட்டத்தின் மீதான டெல்லி காவல்துறையின் அடக்குமுறை எமர்ஜென்சியின் கசப்பான நினைவுகளை மீண்டும் நினைவூட்டுகின்றன! என்று எஸ்டிபிஐ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஸி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேர்தல் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும், வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பான கவலைகளை எழுப்பியும் இன்று நடத்தப்பட்ட அமைதியான போராட்டத்தின் மீது டெல்லி காவல்துறை நடத்திய அடக்குமுறையை எஸ்டிபிஐ கட்சி வன்மையாக கடுமையாக கண்டிக்கிறது.
பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வது மற்றும் அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான உரிமையை பறிப்பது ஆகியவை அவசரநிலையின் கசப்பான நினைவுகளை மீண்டும் நினைவூட்டுகின்றன. வெளிப்படைத்தன்மையை கோரும் குடிமக்களை அச்சுறுத்தலாக கருதும்போது ஜனநாயகத்தால் உயிர்வாழ முடியாது.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும், 2023-ஆம் ஆண்டின் தேர்தல் ஆணையர்கள் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், முன்வைக்கப்படும் எஸ்ஐஆர் முறைகேடுகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும், மேலும் சட்டவிரோதமான எஸ்ஐஆர் நடைமுறைகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் எஸ்டிபிஐ கட்சிகோருகிறது.
சட்டவிரோதமான வாக்காளர் பட்டியல் நடைமுறைகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டு, சட்டப்பூர்வமாக தேவைப்படும் இடங்களிலெல்லாம் மீண்டும் நடத்தப்பட வேண்டும்.
தேர்தல் ஆணையம் சுதந்திரமானதாகவும், வெளிப்படையானதாகவும், மக்களுக்கு பொறுப்புக்கூறுவதாகவும் இருக்க வேண்டும். வாக்களிக்கும் உரிமையில் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது, ஜனநாயக ரீதியிலான எதிர்ப்புகளை அடக்க முடியாது, மேலும் எந்தவொரு அரசியலமைப்பு அமைப்பும் பொதுமக்களின் பொறுப்புக்கூறலுக்கு அப்பாற்பட்டது அல்ல.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.