விலை உயர்ந்த செல்போன்களுக்கு பதிலாக ஸ்வீட் பாக்ஸை மாற்றி வைத்த டெலிவரி ஊழியர் கைது

பார்சலை பிரித்துப் பார்த்த சையத் அப்ரிடி, செல்போன்களுக்குப் பதிலாக ஸ்வீட் பாக்ஸ் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
விலை உயர்ந்த செல்போன்களுக்கு பதிலாக ஸ்வீட் பாக்ஸை மாற்றி வைத்த டெலிவரி ஊழியர் கைது
டெலிவரி ஊழியர் மணீஷ்குமார்
Published on: 

சென்னை,

ஆன்லைன் பார்சல் சேவை மூலம் அனுப்பப்பட்ட விலை உயர்ந்த 2 ஸ்மார்ட்போன்களைத் திருடிவிட்டு, அதற்குப் பதிலாக இனிப்புப் பெட்டியை வைத்து டெலிவரி செய்த சென்னை இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பார்சல் அனுப்பப்பட்ட பின்னணி

சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் சையத் அப்ரிடி. இவர், திரு.வி.க. நகர் எஸ்.ஆர்.பி. கோவில் தெருவில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 6-ஆம் தேதி மாலை, இவரது தொழில் கூட்டாளி நுங்கம்பாக்கத்திலிருந்து சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 விலை உயர்ந்த செல்போன்களை (சாம்சங் மற்றும் கூகிள் பிக்சல்) 'ரேபிடோ' பார்சல் சேவை மூலம் கடைக்கு அனுப்பியுள்ளார்.

செல்லும் வழியில் நூதன திருட்டு

இந்த பார்சலை டெலிவரி செய்வதற்காக வியாசர்பாடியைச் சேர்ந்த 19 வயதான மணீஷ்குமார் என்ற ஊழியர் பணியமர்த்தப்பட்டார். நுங்கம்பாக்கத்திலிருந்து பார்சலைப் பெற்றுக் கொண்ட அவர், செல்லும் வழியில் அகரம் சந்திப்பு அருகே பார்சலைப் பிரித்து உள்ளே இருந்த 2 செல்போன்களையும் திருடியுள்ளார். யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, தான் வாங்கி வைத்திருந்த லட்டு அடங்கிய ஸ்வீட் பாக்ஸை அந்த பார்சலுக்குள் வைத்து, மீண்டும் பத்திரமாக ஒட்டி திரு.வி.க. நகரில் உள்ள கடையில் டெலிவரி செய்துள்ளார்.

போலீசார் விசாரணை

பார்சலை பிரித்துப் பார்த்த சையத் அப்ரிடி, செல்போன்களுக்குப் பதிலாக ஸ்வீட் பாக்ஸ் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் உடனடியாக திரு.வி.க. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றித் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ஊழியர் கைது -செல்போன்கள் மீட்பு

தொடர் விசாரணையில், டெலிவரி ஊழியர் மணீஷ்குமார்தான் இந்த திருட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 23-ம் தேதி மணீஷ்குமாரைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து திருடப்பட்ட 2 விலை உயர்ந்த செல்போன்களையும் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X