மதம் மாறிய காரணத்தால் சமூக நீதியை மறுப்பது நியாயமாகாது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
மதம் மாறிய காரணத்தால் சமூக நீதியை மறுப்பது நியாயமாகாது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
Published on

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அரசியலமைப்புச் சட்டம் குடிமக்கள் தாங்கள் விரும்பும் சமய வழியில் நம்பிக்கை வைக்கவும், பின்பற்றவும் உரிமை வழங்கியுள்ளது. இதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பரமசிவம் என்பவர், இந்து மதத்தில் இருந்து 2015 ஆம் ஆண்டில் இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார்.

“சாதி” அடையாளம்

மதம் மாறிய பிறகு, சமீர் என்ற பெயரில் இஸ்லாம் மதத்தில் உள்ள ஒரு பிரிவை சேர்ந்தவராக, தன்னை பதிவு செய்து சான்றிதழ் வழங்குமாறு வட்டாட்சியரிடம் மனு செய்துள்ளார்.

இவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

நமது சமூக அமைப்பில் பிறப்பின் அடிப்படையில் தான் “சாதி” அடையாளம் தீர்மானிக்கப்படுகிறது. ஒருவர் மதம் மாறினாலும் மத அடையாளங்கள் மாறுகிறதே தவிர, சாதி அடையாளம் அப்படியே தொடர்கிறது. சில தலைமுறைகளுக்குப் பிறகு தான் மாற்றம் பெறுகிறது என்பது தான் வாழ்க்கை அனுபவமாகும்.

சமூக வாழ்நிலையை கருத்தில் கொண்டு தான், மதம் மாறுபவர்களுக்கு இஸ்லாம் மதத்தின் 7-வது உள் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றின் கீழ் சான்றிதழ் வழங்கலாம் என்று தமிழ்நாடு அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையின்படி, சமீருக்கு, அவர் கோரிய சான்றிதழ் வழங்கியிருக்க வேண்டும்.

சமூக அநீதி

ஆனால், நீதிமன்றம் மனுதாரரின் கோரிக்கை எல்லைக்கு வெளியே சென்று, 1951 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட சமூக வாழ்நிலை எதார்த்திற்கு மாறாக கூறியுள்ள கற்பிதமான கருத்தை பற்றிக் கொண்டும், அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பதை காரணம் காட்டியும், சமீரின் முறையீட்டை நிராகரித்திருப்பதும், அவரது சான்றிதழ் கோரிக்கையை நிராகரித்த வட்டாட்சியர் உத்தரவை நியாயப்படுத்தியும், சமூக நீதிக் கொள்கை நிலையில் தமிழ்நாடு அரசு 2024 ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்துள்ளதும் சமூக அநீதியாகும்.

தமிழ்நாடு அரசு அரசாணை

மதம் மாறியவுடன் சாதிய வேற்றுமைகள் நொடியில் மறைந்து போகும் என்ற கனவு நிலையில், மதம் மாறியவரின் கோரிக்கையை நிராகரிப்பது சமூக அநீதியாகும் என்பதால், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி அமர்வு அண்மையில் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல் முறை செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு 2024-ம் ஆண்டு வெளியிட்ட அரசாணையை நிலைநிறுத்த சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com