பழனி முருகன் கோவிலில் விஜயதசமி அன்று காலை 11 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

பழனி மலைக்கோவிலில் அனைத்து வகையான கட்டண தரிசனச்சீட்டுகளின் விற்பனையும் காலை 11.30 மணிக்கு நிறுத்தப்படும்.
பழனி முருகன் கோவிலில் விஜயதசமி அன்று காலை 11 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!
Published on: 

பழனி,

விஜயதசமி தினத்தையொட்டி, பழனி மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் காலை 11 மணி வரை மட்டுமே தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

வரும் 20-ம் தேதி விஜயதசமி திருநாளை முன்னிட்டு, பழனி மலைக்கோவிலில் நண்பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து பிற்பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும்.

இதையடுத்து, பிற்பகல் 2.45 மணிக்கு பராசக்தி வேல் புறப்பாடு நடைபெற்று, சன்னதி திருக்காப்பிடப்படும். தொடர்ந்து, பராசக்தி வேல் கோதைமங்கலம் சென்று அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் மலைக்கோவிலுக்கு வந்தடைந்ததும் ராக்கால பூஜை நடைபெறும்.

கட்டணச்சீட்டு விற்பனை நிறுத்தம்

விஜயதசமி தினத்தன்று நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிகளைக் கருத்தில் கொண்டு, பழனி மலைக்கோவிலில் அனைத்து வகையான கட்டண தரிசனச்சீட்டுகளின் விற்பனையும் காலை 11.30 மணிக்கு நிறுத்தப்படும்.

11 மணி வரை மட்டுமே அனுமதி

மேலும், அன்றைய தினம் தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் காலை 11 மணி வரை மட்டுமே மலைக்கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். எனவே, விஜயதசமி நாளில் பழனி மலைக்கோவிலில் முருகப்பெருமானை தரிசிக்கத் திட்டமிடும் பக்தர்கள், கோவில் நிர்வாகம் அறிவித்துள்ள நேரத்தைக் கருத்தில் கொண்டு தங்களது பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com