திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்றும், நாளையும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 2 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்றும், நாளையும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை
Published on

திருவண்ணாமலை,

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. மக்கள் அதிகம் கூடினால் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் என்பதால் அதை தடுக்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மத வழிபாட்டு தலங்களில் மக்கள் அதிகமாக செல்வதால் கொரோனா பரவும் அபாயம் இருந்ததால் பல்வேறு கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன.

இதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு கடந்த 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து 4-ந் தேதி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பக்தர்கள் நலனை கருத்தில் கொண்டு 8-ந்தேதி வரை அதாவது நேற்று முன்தினம் வரை தரிசனத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டது.

இந்த தடை நேற்று முன்தினத்துடன் முடிவடைந்த நிலையில் நேற்று காலை கோவில் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டனர். 8 நாட்களுக்கு பின்னர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டதால் பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

இந்தநிலையில் ஆடிப்பூரம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்றும், நாளையும் 2 நாட்கள் கோவில் நடை சாத்தப்படுகிறது.

இதுதொடர்பாக கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்றும், நாளையும் கோவிலுக்கு அதிக அளவிலான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் 2 நாட்களுக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. தீமிதி விழா நடைபெறாது. பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஆனால் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்று அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com