

திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த நிலையில் வைகாசி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மதியம் 12.50 மணி அளவில் தொடங்கியது. பவுர்ணமி யையொட்டி நேற்று காலை முதலே பக்தர்களின் வருகை அதிகரிக்க தொடங்கியது. பவுர்ணமி மதியத்தில் தொடங்கியதால் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்றனர். கோவிலில் பக்தர்கள் விரைந்து சாமி தரிச னம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
மேலும் கோவிலுக்கு வெளியில் மட்டுமின்றி கோவில் உள்புறமும் பல்வேறு வரிசைகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் சிர மமின்றி சாமி தரிசனம் செய்ய சென்றனர். கோவிலில் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரத்திற்கும் மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
வரிசையில் சென்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் இணை ஆணையர் பரணிதரன் மோர், குடிநீர் பாட்டில், பிஸ்கட், வாழைப்பழம் போன்றவற்றை வழங்கினார். நேற்று வெயில் சுட்டெரித்ததால் பகலில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது. மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்ன தானம் மற்றும் மோர் வழங்கப்பட்டது.
பவுர்ணமி கிரிவலத்தையொட்டி திருவண்ணாமலை நகரம், மாட வீதிகள் மற்றும் கிரிவலப்பாதை பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பவுர்ணமி கிரிவலமானது இன்று மதியம் 2.41 மணி அளவில் நிறைவடைகிறது. அதனால் பக்தர்கள் இன்று அதிகாலை வரையில் தொடர்ந்து விடிய, விடிய கிரிவலம் சென்ற வண்ணம் காணப்பட்டனர்.
இந்தநிலையில், திருவண்ணாமலையில் வைகாசி மாத பௌர்ணமி முடித்து, தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.
குறைந்த அளவில் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதால், தனியார் பேருந்துகளில் வேலூருக்கு ரூ.400 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.
கிரிவலம் முடித்துவிட்டு பஸ்சுக்காக காத்திருந்த பயணிகளிடம் சுமார் 50க்கும் மேற்பட்ட செல்போனை திருடிய சிறுவனை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் திருட்டு குறித்து புகார் அளித்தும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
சரி ரெயிலில் பயணம் செய்யலாம் என்றாலும் அங்கும் கூட்டம் அலைமோதியது. கிரிவலம் முடிந்து, தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக முண்டியடித்து காட்பாடி செல்லும் ரெயிலில் ஏறிய பக்தர்களால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடுப்பு கயிற்றையும் தாண்டி ரெயிலில் இடம் பிடிக்கச் சென்றதால் பரபரப்பு நிலவியது.