ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்; அக்னிதீர்த்த கடலிலும் புனித நீராடினர்

15 நாட்களுக்கு பிறகு தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் ராமேசுவரம் கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். மேலும் அவர்கள் அக்னி தீர்த்த கடலிலும் புனித நீராடினர்.
ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்; அக்னிதீர்த்த கடலிலும் புனித நீராடினர்
Published on

தரிசனத்துக்கு அனுமதி

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் கடந்த 1-ந் தேதி ஆடி திருக்கல்யாண திருவிழா தொடங்கியது. கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் அன்று முதல் 15-ந்தேதி வரை கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு இருந்தது. மேலும் அக்னி தீர்த்த கடல் பகுதியிலும் பக்தர்கள் புனித நீராடவும், கடற்கரையில் அமர்ந்து தர்ப்பணம் செய்யவும் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்தநிலையில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்டிருந்த தடையானது நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் 15 நாட்களுக்கு பிறகு ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நேற்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

நீண்ட வரிசை

இதனால் நேற்று அதிகாலையில் நடை திறக்கப்படும் முன்பே கோவிலின் கிழக்கு வாசல் ரதவீதி சாலையில் இருந்து தெற்கு ரதவீதி கோபுரம் வரையிலும் பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்தனர். காலை 4.45 மணி அளவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெற்று அதன் பின்னர் 6 மணியில் இருந்து பக்தர்கள் ஒவ்வொருவராக சமூக இடைவெளி விட்டு கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று மகிழ்ச்சியுடன் தரிசனம் செய்தனர்.

புனித நீராடல்

அதுபோல் அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் நீராட விதிக்கப்பட்டிருந்த தடையும் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து நேற்று காலை முதலே வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடியதுடன் கடற்கரையில் அமர்ந்து திதி மற்றும் தர்ப்பண பூஜைகளையும் புரோகிதர்கள் மூலம் செய்தனர்.கடந்த 2 வாரத்திற்கும் மேலாக வெறிச்சோடி காணப்பட்டு வந்த ராமேசுவரம் கோவில் ரதவீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை பகுதி நேற்று மீண்டும் பக்தர்கள் கூட்டத்துடன் களைகட்டி காணப்பட்டது. அதே நேரத்தில் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராட விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ்கோடி

இதே போல் சுற்றுலா பயணிகள் நேற்று தனுஷ்கோடிக்கும் அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com