”கூட்டணி விசுவாசத்திற்காக இந்திய அரசியலமைப்பை எதிர்க்க துணிந்துவிட்டாரா”... முதல் - அமைச்சர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

"நான் சட்டவிரோத முதல்வர்" என்பதை ஒப்புக்கொண்டு ஜோசப் விஜய் பதவி விலகத் தயாரா? என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்
Published on: 

சென்னை,

”கூட்டணி விசுவாசத்திற்காக இந்திய அரசியலமைப்பை எதிர்க்க துணிந்துவிட்டாரா”என முதல் - அமைச்சர் விஜய்க்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்,

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக போர்க்கொடி பிடிக்கிறதா தவெக அரசு ? கூட்டணி விசுவாசத்திற்காக இந்திய அரசியலமைப்பை எதிர்க்க துணிந்துவிட்டாரா முதல் - அமைச்சர் விஜய் ? அனைத்து மக்களின் வாக்குரிமையை பாதுகாக்கும் வகையில், போலி வாக்காளர்களை கண்டறிதல், வாக்காளர் கணக்கெடுப்பு, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு உட்பட பல செயல்முறைகளை முன்னெடுத்து வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றுள்ள தவெக-விற்கு எனது கடும் கண்டனங்கள்.

பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி, கிராமசபை என நாடு முழுவதிலும் நடக்கும் அனைத்து தேர்தல்களிலும் படு தோல்வியை சந்தித்து வரும் இந்திய தேசிய காங்கிரஸ், தங்கள் கையாலாகாத்தனத்தை மறைக்க தேர்தல் ஆணையத்தின் மீதும் , சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மீதும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதும் பழி போட்டு வருகிறது. "வாக்கு திருட்டு" நடந்ததற்கான ஆதாரங்களைக் கேட்டால், "ஆடு திருடு போகவில்லை, திருடு போன மாதிரி கனவு கண்டேன்" என்ற நகைச்சுவை வசனம் போல, "ஆதாரம் இல்லை, ஆனால் எனக்கு அப்படித் தோன்றுகிறது" என்று மழுப்புகிறார் ராகுல்காந்தி.

இப்படிப்பட்டவர்களுடன் இணைந்து கொண்டு, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள முதல் - அமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பது, மிகப்பெரிய அரசியல் பிழை. மண் குதிரையை நம்பி யாராவது நட்டாற்றில் இறங்குவார்களா? மேலும், கேரளாவைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ரமேஷ் சென்னிதலா, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை வரவேற்றுள்ளார். சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்குப் பிறகு, கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது, தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்தது, அரை நூற்றாண்டுக்கு பிறகு காங்கிரசுக்கு தமிழக அமைச்சரவையில் இடமும் கிடைத்தது.

அதுமட்டுமன்றி, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலமாக, நிரந்தரமாக இடம்பெயர்ந்த வாக்காளர்கள், இறந்த வாக்காளர்கள், இரட்டை வாக்குரிமை கொண்டவர்கள் உட்பட சுமார் 13 கோடி பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அப்படியென்றால், இறந்த வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைத் தக்க வைத்துக்கொண்டு தனக்கு வாக்களிக்க வேண்டும் என ராகுல் காந்தி விரும்புகிறாரா? முதல் - அமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் அதை ஆமோதிக்கிறாரா? மேலும், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு பிறகு பதவிக்கு வந்தவர்கள் "சட்டவிரோத குடியிருப்பாளர்கள்" என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் கருத்தை தவெக ஏற்றுக்கொள்கிறதா? "நான் சட்டவிரோத முதல்வர்" என்பதை ஒப்புக்கொண்டு ஜோசப் விஜய் பதவி விலகத் தயாரா?

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com