தவெக எம்.எல்.ஏ-வை அவமதிக்கவில்லை - மேயர் பிரியா விளக்கம்

பள்ளி கட்டிட திறப்பு விழாவில் புரோட்டாகால் படி தான் செயல்பட்டுள்ளோம் என்று மேயர் பிரியா கூறினார்.
தவெக எம்.எல்.ஏ-வை அவமதிக்கவில்லை - மேயர் பிரியா விளக்கம்
Published on

சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் கட்டிட திறப்பு விழாவில் மேயர் பிரியா, தவெக எம்எல்ஏ பல்லவி பங்கேற்ற நிலையில் சர்ச்சை எழுந்துள்ளது.விழாவில் தன்னை புறக்கணித்ததாக எம்எல்ஏ பல்லவி கூறிய நிலையில், விழா நெறிமுறைகளின்படி தான் குத்துவிளக்கு ஏற்றிய பிறகு ஐஏஎஸ் அதிகாரியிடம் கொடுத்ததாகவும் எம்எல்ஏ வரும் வரை காத்திருந்து நிகழ்ச்சியைத் தொடங்கியதாகவும் மேயர் பிரியா விளக்கமளித்துள்ளார்.இது மேயர் பிரியா கூறியதாவது: பள்ளி கட்டிட திறப்பு விழாவிற்கு எம்எல்ஏ பல்லவி தாமதமாக வந்தார்.பள்ளி கட்டிட திறப்பு விழாவின் போது ரிப்பனை எனக்கு முன்பாக எம்எல்ஏ பல்லவி வெட்டினார். பள்ளி கட்டிட திறப்பு விழாவில் புரட்டகால் படி தான் செயல்பட்டுள்ளோம்” என்றார்.

சர்ச்சை என்ன?

சென்னை மாநகராட்சி தி.மு.க. மேயர் பிரியா ஆளும் கட்சியாக தி.மு.க. இருந்த போது, பரபரப்பாக இயங்கியவர். தற்போது சென்னையில் பெருவாரியான தொகுதிகளை த.வெ.க. கைப்பற்றியதால் மேயர் பிரியா சமீபகாலமாக மாநகராட்சிக்கு அவ்வளவாக வருவதும் இல்லை. பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் இல்லை.இந்த நிலையில், இன்று காலையில் திரு.வி.க.நகர் தொகுதிக்குட்பட்ட புளியந்தோப்பில் உள்ள உருது பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிட திறப்பு விழா நடந்தது. இதற்காக மேயர் பிரியா முதல் ஆளாக அங்கு வந்தார். அவருடன் கல்வி நிலைக்குழு தலைவர் பாலவாக்கம் விஸ்வநாதன், இணை ஆணையர் கற்பகம் உள்பட அதிகாரிகளும் ஆஜராகி இருந்தார்கள்.

கட்டிட திறப்பு விழாவுக்கு தயாராகி வளாகத்திற்குள் செல்ல முற்பட்ட போது அந்த தொகுதியின் த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவி போக்குவரத்து நெரிசலில் சிக்கி உள்ளார். விரைவில் வந்து விடுவார் என்றனர். இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும் போதே எம்.எல்.ஏ. பல்லவியும் அங்கு வந்து சேர்ந்தார்.திறப்பு விழா ரெடியானது. என்ன திட்டத்தாலோ வாசலில் 2 ரிப்பன்கள் கட்டப்பட்டிருந்தன. 2 கத்தரிகளும் தயாராக வைக்கப்பட்டிருந்தது. மேயர் பிரியாவும், எம்.எல்.ஏ. பல்லவியும் ஆளுக்கொரு கத்தரியை கையில் வைத்திருந்தனர். மேயர் பிரியா திடீரென்று 2 ரிப்பன்களையும் ஒன்றாக சேர்த்து தன் கையில் இருந்த கத்தரியால் ரிப்பனை வெட்டி கட்டிடத்தை திறந்து விட்டார்.

அதிருப்தியும் அதிர்ச்சியும்

இதனால் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்த பல்லவியின் முகம் கடுகடுப்பானது. அதைத் தொடர்ந்து உள்ளே சென்றனர். அங்கு அடுத்ததாக குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.விளக்கில் உள்ள தீபம் ஏற்றுவதற்காக மெழுகுவர்த்தி ஒன்றை பிரியா கையில் கொடுத்தனர். அவர் முதல் திரியை ஏற்றினார். பிரியாவுக்கு அடுத்ததாக பல்லவி நின்று கொண்டிருந்தார். அவருக்கு அடுத்ததாக இணை ஆணையர் கற்பகம் நின்று கொண்டிருந்தார். முதல் திரியை ஏற்றியதும் அடுத்த திரியை ஏற்றுவதற்காக கையில் வைத்திருந்த மெழுகுவர்த்தியை நீட்டினார். தன்னிடம்தான் தரப்போகிறார்கள் என்று பல்லவி மெழுகுவர்த்தியையே பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆனால் பிரியாவோ அந்த மெழுகுவர்த்தியை பல்லவியை தாண்டி நின்றிருந்த கற்பகத்தை நோக்கி நீட்டுவதை பல்லவி பார்த்துவிட்டார்.அதற்குள் அதிகாரி கற்பகமும் வேறு வழியில்லாமல் மேயர் கொடுத்த மெழுகுவர்த்தியை பெற்றுக் கொண்டார். விளக்கில் தீபத்தை ஏற்ற வேண்டும் என்றால் பல்லவி சற்று நகர வேண்டி இருந்தது. அப்போது பல்லவியும் நகர்ந்து சென்றதால் விளக்கு ஏற்றுவதற்கு வசதியாகத்தான் பல்லவி நகருவதாக அதிகாரி கற்பகம் நினைத்தார். ஆனால் பல்லவியோ, தனக்கு இழைக்கப்பட்ட அவமானத்தால் கோபித்துக் கொண்டு அங்கிருந்து விறுவிறுவென்று வெளியேறினார்.

எம்.எல்.ஏ பல்லவி மறுப்பு

இதையடுத்து 75வது வார்டில் உள்ள சின்னபாபு தெருவில் நடைபெற்ற மற்றொரு ஆரம்ப பள்ளி கட்டிடத் திறப்பு விழாவில் எப்படியாவது எம்.எல்.ஏ. பல்லவியை விளக்கேற்ற வைத்து விட வேண்டும் என்று திட்டமிட்டார்கள்.அதன்படி, முதலில் ரிப்பன் வெட்டுவதற்கு மேயரை ஏற்பாடு செய்தனர். மேயர் பிரியாவும் ரிப்பனை வெட்டிவிட்டு அடுத்ததாக குத்துவிளக்கு ஏற்றுவதற்கு எம்.எல்.ஏ. பல்லவியிடம் மெழுகுவர்த்தியை கொடுக்க முயன்றார். ஆனால் பல்லவி அதை ஏற்க மறுத்துவிட்டார். நீங்களே ஏற்றி விடுங்கள் என்று கூறிவிட்டார்.இப்படி 2 நிகழ்ச்சிகளிலும் அடுத்தடுத்து 2 பெண் தலைவர்களுக்குள்ளும் நடந்த இந்த அதிகார மோதல் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தது.கட்சிகள் வேறாக இருந்தாலும் ஆட்சிகள் வேறாக இருந்தாலும் நடப்பது பொதுவான அரசு நிகழ்ச்சி. இதில் இப்படி தங்கள் அதிகாரத்தை காட்டலாமா? என்று பொதுமக்கள் நடந்த சம்பவத்தை பார்த்து முணுமுணுத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com