டிஜிட்டல் கைது மோசடி: டெல்லியில் 24 சிம் பாக்ஸ்களுடன் 3 பேர் கைது

தமிழக சைபர் கிரைம் கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் உத்தரவின் பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது
சென்னை,
சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றுவதற்கும், ‘டிஜிட்டல்' கைது போன்ற சைபர் மோசடி செயல்களுக்கும் ‘சிம் பாக்ஸ்’ கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உளவுப்பிரிவு போலீசார் அளித்த தகவல் அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ‘சைபர் கிரைம்' போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இதில் 19 ‘சிம் பாக்ஸ்’ கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டு 11 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இந்த கும்பல் டெல்லி, மும்பை, பீகாரிலும் ‘சிம் பாக்ஸ்’களை ஒப்படைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில் தமிழக சைபர் கிரைம் கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் உத்தரவின் பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் டெல்லி, பீகார், மும்பைக்கு சென்று முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 24 ‘சிம் பாக்ஸ்’கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை ‘டிஜிட்டல்' கைது மோசடி செயலுக்கு பயன்படுத்தப்பட்டு இருப்பதையும் சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்துள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் நடைபெற்ற சைபர் மோசடி செயலுக்கு இந்த ‘சிம் பாக்ஸ்’களுக்கு உள்ள தொடர்புகளை கண்டறிய, தற்போது ஆய்வு நடந்து கொண்டு இருப்பதாக கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் தகவல் தெரிவித்துள்ளார்.






