

திண்டுக்கல் அருகே புகையிலைப்பட்டியில் உள்ள புனித சந்தியாகப்பர், செபஸ்தியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்தது. இதற்காக திண்டுக்கல், தேனி. மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 900 காளைகள் முன்பதிவு செய்யப்பட்டன. இதில் 832 காளைகள் பங்கேற்றன. மருத்துவக்குழுவினர் பரிசோதனைக்குப்பின் 326 மாடுபிடி வீரர்கள் களமாட அனுமதிக்கப்பட்டனர்.
வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை களத்தில் நின்றிருந்த மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்க முயன்றனர். ஆனால் பல காளைகள் வீரர்களிடம் சிக்காமல் போக்கு காட்டி சென்றன. சில காளைகள் அடங்க மறுத்து, பிடிக்க வந்த மாடுபிடி வீரர்களை முட்டி பந்தாடின. சீறிப்பாய்ந்த காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டிய காட்சியை பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.
இதற்கிடையே காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் என 35 பேர் காயமடைந்த னர். அவர்களில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்த மாடுபிடி வீரர் பாலகுரு (வயது 24), திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டியை சேர்ந்த முருகன்(50), பில்லமநாயக்கன்பட்டி தமிழரசன்(20) உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாலகுரு பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனையின்போது குழப்பம் ஏற்பட்டது. இதனால் வீரர்கள் அங்கு வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி, வீரர்களை ஒழுங்குப்படுத்தினர். இதனால் அப்பதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.